ரஸ்ஸில்மேனியாவுக்கு முன்பாக பெரிதாகப் பேசப்படும் விஷயமாக இருந்து வருவது ட்ரிபிள் ஹெச் மற்றும் பாடிஸ்டா ஆகியோரின் சமீபத்திய பகைதான். இதன் காரணமாகவே எதிர்வரும் ரஸ்ஸில்மேனியாவில் இவர்களுக்கான போட்டியை அமைப்பதில் ஆர்வத்துடன் களமிறங்கியுள்ளது WWE.
EVOLUTION நாட்கள் என்று அழைக்கப்படும் அந்த காலத்தில் ட்ரிபிள் ஹெசின் வழிகாட்டுதலில் “தி அனிமல்” எனப்படும் பாடிஸ்டா சண்டையிட்டு வந்தார். பின்பு தனியாளாக உச்சத்துக்கு உயர்ந்த பாடிஸ்டா, ரஸ்ஸில்மேனியா 21-ல் ட்ரிபிள் ஹெச்சை வீழ்த்தி வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை வென்றிருந்தார். இந்தப் பெரும் வெற்றிக்குப் பிறகு பாடிஸ்டாவின் கேரியர் ஏறுமுகத்தில் சென்றது.
ரஸ்ஸில்மேனியாவை பொருத்தவரை இவ்விரு ஜாம்பவான்களுக்கு எதிராக போட்டியிடுவதே ஒரு பெரும் சவாலாக இருக்கும் பொழுது, அவ்வாறு போட்டியிட்டு வெற்றியும் கண்டுள்ள மூன்று சூப்பர் ஸ்டார்களை பற்றி இத் தொகுப்பில் காணலாம்
#3. டேனியல் பிரையன்
டேனியல் பிரையனின் “யெஸ்” அறைக்கூவல் ஞாபகம் உள்ளதா? 2014-ஆம் ஆண்டு டேனியல் பிரையன் WWE-வின் ஒப்பற்ற சூப்பர்ஸ்டாராக விளங்கினார். தற்போதைய வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியனான டேனியல் பிரையன் ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட சூப்பர்ஸ்டாராக ரஸ்ஸில்மேனியா 30-க்கு ஆயத்தமானார்.
டேனியல் பிரையன் உச்சத்தில் இருக்கும் அதே காலகட்டத்தில், தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பல முயற்சிகளை செய்து வந்தார் டேவ் எனப்படும் பாடிஸ்டா. அந்த வருடத்தில் பாடிஸ்டாவை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று பல உத்திகளை WWE கையாண்டது.ஆனால் டேனியல் பிரையனின் புகழுக்கு முன்பாக அத்திட்டங்கள் பொய்த்துப் போயின. பிரையனின் கனவு வருடமாக அமைந்த அவ்வருடத்தில் ரேண்டி ஆர்டன், பாடிஸ்டாவை மெயின் ஈவெண்ட்டில் வீழ்த்தி WWE சாம்பியன்ஷிப்பை வென்றார். பின்பு ரஸ்ஸில்மேனியாவில் “தி கேம்” ட்ரிபிள் ஹெச்சை வீழ்த்தி அசாதாரண சாதனையை செய்திருந்தார்.
#2. ஜான் ஸினா
ஜான் ஸினா WWE-வின் உச்சகட்ட நட்சத்திரமாக போற்றப்படுபவர். இவர் சண்டையிடாத எதிராளியே இல்லை. இவர் WWE-வில் சம்பாதித்த பெயர் புகழ் ஒப்பற்றது.
டேனியல் பிரையனை தொடர்ந்து இவரும் ட்ரிபிள் ஹெச் மற்றும் பாடிஸ்டாவை வென்ற வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். ட்ரிபிள் ஹெச் மற்றும் பாடிஸ்டா போன்றவர்கள் நல்ல உடல் கட்டுடன் விளங்கக்கூடியவர்கள், இவர்களை எதிர்த்து போட்டியிடுவது அபாயகரமாக அக்காலத்தில் கருதப்பட்டது. எனவே அந்த காலகட்டத்திலேயே இவர்களை எதிர்த்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் “தி சிநேஷன்” என்று அழைக்கப்படும் ஜான் ஸினா.
ஸினா ரஸ்ஸில்மேனியா 22-ல் ட்ரிபிள் ஹெச்சுக்கு எதிராக களம் கண்டார். ஸினாவின் “STF” என்று அழைக்கப்படும் லாக்கிற்கு ஆளான ட்ரிபிள் ஹெச் தாங்கமுடியாமல் டேப் அவுட் செய்தார்.
ரஸ்ஸில்மேனியா 26-ல் பாடிஸ்டாவுக்கு எதிராக களம் கண்டார் ஸினா. ட்ரிபிள் ஹெச்சை போலவே ஜான் ஸினாவின் “STF” லாக்கிற்கு பணிந்தார் பாடிஸ்டா.
#1. தி அண்டர்டேக்கர்
ரஸ்ஸில்மேனியா என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது அண்டர்டேக்கர் தான். 21 ஆண்டுகளாக தொடர்ந்து ரஸ்ஸில்மேனியாவை வென்று குவித்த அண்டர்டேக்கர் பலதரப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
ரஸ்ஸில்மேனியாவில் பலதரப்பட்ட எதிரிகளை எதிர்கொண்டு அவர்களை வீழ்த்தி இருந்தாலும், ட்ரிபிள் ஹெச் மற்றும் பாடிஸ்டாவை எதிர்கொண்டு வென்றது சிறப்பாகவே கருதப்படுகிறது.
பாடிஸ்டாவின் வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பெல்டுக்கான போட்டி ரஸ்ஸில்மேனியா 23-ல் நடைபெற்றது. அப்போட்டியில் அண்டர்டேக்கரின் அபார ஆட்டத்தால் பாடிஸ்டா தனது பெல்டினை இழக்க நேரிட்டது.
ரஸ்ஸில்மேனியாவில் ட்ரிபிள் ஹெச்சை எதிர்த்து மூன்று முறை களம் கண்டுள்ளார் அண்டர்டேக்கர். அனைத்து போட்டிகளிலுமே வெற்றியை தன்வசப்படுத்தியிருந்தார் அண்டர்டேக்கர்.