ரஸில்மேனியா நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பல போட்டிகள் இன்னும் உறுதி செய்யப்படாமலேயே இருக்கின்றன. பெரிய போட்டிகளை தவிர மற்ற போட்டிகளுக்கான எந்த ஒரு அறிவிப்பையும் WWE நிர்வாகம் அறிவிக்கவில்லை.
இன்று நடந்த ரா நிகழ்ச்சியானது பல்வேறு விஷயங்களை உறுதிப்படுத்தியது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது ரோமன் ரெய்ங்ஸ் நோயிலிருந்து மீண்டு வருவதை பற்றிய அறிவிப்பு தான்.
நான் தற்போது நன்றாக செயல்படுகிறேன் விரைவில் என்னை களத்தில் காணலாம் என்று ரோமன் சொன்னவுடன் அலைகடலென திரண்டிருந்த ரசிகர்கள் ஆக்ரோஷத்தோடு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ரோமனின் இந்த அறிவிப்பானது ரஸில்மேனியா 35 -க்கு ஏதுவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெற்ற ரா நிகழ்ச்சியில், நடைபெறவிருக்கும் இரண்டு ரஸில்மேனியா போட்டிகளுக்கான விவரத்தை சூசகமாக வெளிப்படுத்தியுள்ளது WWE.
#1. ரோமன் ரெய்ங்ஸ் VS ட்ரிவ் மக்என்டயர்
அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நிறைவு பெறவே இறுதி கட்டத்தை எட்டிய ரா நிகழ்ச்சியில், பேரன் கார்பின், லாஷ்லி மற்றும் மக்என்டயர் ஆச்சரியமாக ஒன்றுகூடி எலியாஸுடன் கைகோர்த்து டீன் ஆம்புரோஸை தாக்கினர். இந்நிகழ்வானது டீன் ஆம்புரோஸ் மற்றும் மக்என்டயர் இடையேயான போட்டி நிறைவடைந்த பிறகு நடைபெற்றது.
டீன் ஆம்புரோஸ் தாக்கப்படுவதை கண்ட ரசிகர்கள் “Burn It Down” என்று ஆரவாரமிட்டனர், அதன் விளைவாகவே சேத் ரால்லின்ஸ் நாற்காலியுடன் அரங்கத்தில் நுழைந்தார். கூடவே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோமன் ரெய்ங்ஸும் அவருடன் வந்தார். இருவரும் வந்தவேகத்திலேயே அம்புரோஸை தாக்கியவர்களை சுத்து போட்டு தாக்கினர்.
இந்நிகழ்வில் பிரமிப்பூட்டும் வகையில் ரோமனின் பினிஷரான “ஸ்பியர்”-க்கு மக்என்டயர் உள்ளாக்கப்பட்டார். இதைக்கண்ட WWE ரசிகர்கள் மகிழ்ச்சியின் வெள்ளத்தில் ஆரவாரமிட்டனர்.
சில மாதங்களில் டீன் ஆம்புரோஸ் விட்டு செல்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, எனவே அவரின் கடைசி நிகழ்வாக “ஷியில்ட்” அணியுடன் சில போட்டிகளில் இவரை WWE முன்னிறுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
மேலும் இப்போட்டியில் ரோமன் ரெய்ங்ஸினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மக்என்டயரூடன் ரஸில்மேனியா 35-ல் "தீ பிக் டாக்" ரோமன் பலப்பரீட்சை நடத்துவார் என்று தெரிகிறது.
எதிர்வரும் பாஸ்ட்லென் போட்டிகளில் இதற்கான கதை முன்வடிவம் அமைக்கப்பட்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
#2. ட்ரிபிள் ஹெச் VS பாடிஸ்டா
இன்றளவும் WWE ரசிகர்களால் பெரிதாகப் பேசப்படுவது WWE ஸ்மாக்டவுன் 1000-மாவது நிகழ்ச்சிதான். இந்நிகழ்ச்சியில் பரம எதிரிகளான ட்ரிபிள் ஹெச் மற்றும் பாடிஸ்டா பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இருவருக்கிடையேயான போட்டியை செயல்படுத்துவதற்காக பல மாதங்களாகவே பேசப்பட்டு வருகிறது. பாடிஸ்டா ஹாலிவுட் திரையுலகில் பிஸியாக உள்ளதால் போட்டி தள்ளிக்கொண்டே போகிறது எனவும் கருத்து நிலவி வருகிறது.
கடந்த WWE ஸ்மாக்டவுன் ஆயிரமாவது நிகழ்ச்சியில் பாடிஸ்டா ட்ரிபிள் ஹெச்சை நோக்கி நீங்கள் என்னை வீழ்த்தவே இல்லை என்று கூறியதன் மூலம் இவ்விரு வீரர்களுக்கிடையேயான பழைய பகை மீண்டும் உயிர் பெற்றது.
இன்று நடந்த ரா நிகழ்ச்சியில், முன்னாள் வீரரும் WWE-ஹால் ஆஃப் பேமரான ரிக் ஃபளேயரின் பிறந்தநாளை கொண்டாட தற்போதைய சூப்பர் ஸ்டார்களும், WWE நிர்வாக அதிகாரிகளும் ஆயத்தமாகி கொண்டிருந்தனர்.
பின்பு திடீரென ரிக் ஃபளேயரின் அறைக்குள் நுழைந்த பாடிஸ்டா அவரை தாக்க முற்பட்டார். இதனை திரையில் பார்த்துக்கொண்டிருந்த டிரிபிள் ஹெச் அதிர்ச்சி அடையவே ரிக் ஃபளேயரை காப்பாத்த அரங்கத்திலிருந்து ஓட்டம் பிடித்தார். ட்ரிபிள் ஹெச் ரிக் ஃபளேயர் தாக்குதலுக்கு உள்ளான இடத்தைச் சென்றடையவே பாடிஸ்டா அங்கிருந்து தப்பித்து விட்டார்.
எனவே பாடிஸ்டாவின் இச்செயல் ட்ரிபிள் ஹெச்சை பெரும் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. ஆகவே பாடிஸ்டாவின் இந்நடவடிக்கையானது ரஸில்மேனியா 35-இல் இவ்விரு வீரர்களை போட்டியிட வைப்பதற்காகவே இந்தக் கதைக் களம் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று பேசப்படுகிறது.