WWE நெட் வொர்க் சார்பில் வருடாவருடம் நடக்கும் மெயின் ஈவன்ட்களில் ஒன்று தான் சர்வைவர் சீரியஸ். இந்த வருடத்திற்கான சர்வைவர் சீரியஸ் நவம்பர் 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில் RAW மற்றும் SMACKDOWN ல் உள்ள வீரர்களுக்கு வெவ்வேறு பிரிவுகளில் சண்டை நடைபெறும். அந்த வகையில் நடைபெற்ற சாம்பியன் VS சாம்பியன் சண்டையில் சேத் ராலின்ஸ் மற்றும் ஸின்ஷீகே நாக்கமோரா ஆகியோர் மோதினர். அதில் சிறப்பாக சண்டையிட்ட சேத் ராலின்ஸ், மூன்று சூசைட் டைவுகளுக்கு பிறகு வெற்றி பெற்றார். இந்தப் போட்டியின் முடிவில் நாக்கமோரா, ராலின்ஸ் ஐ பாராட்டிவிட்டு விடைபெற்றார். இந்த வெற்றியை தொடர்ந்து டிசம்பர் 16 ல் நடக்கவிருக்கும் மற்றொரு மெயின் ஈவன்டான TLC (TABLES, LADDERS AND CHAIRS) ல் ஷீல்டின் கடைக்குட்டி மற்றும் ஷீல்டின் சகோதரர் என்றழைக்கப்படும் டீன் ஆம்ரோஸ் உடன் தன்னுடைய சாம்பியன்ஷிப் பெல்ட்டை வைத்து சண்டையிடுகிறார்.
இதுவரை இவர்களுக்கிடையே நடந்தவை.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ஷீல்ட் மீண்டும் ஒன்றாக இணைந்தனர் . இது என்ன பழைய கதை மறுபடியும் ஆரம்பிக்கிறதே என்று எண்ணிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வைத்திருந்தது WWE. ஷீல்டின் ரீ யூனியனை விரும்பாத, அப்போது Tag team சாம்பியன்ஸாக இருந்த ட்ரு மேக்கன்டைர் மற்றும் டால்ப் ஜிக்லர் ஆகியோர் WWE ன் கான்ஸ்டபிள் என்றழைக்கப்படும் பேரின் கார்பன் உடன் இணைந்து ஷீல்டை நிரந்தரமாக பிரிக்க திட்டம் தீட்டினர். அதன்படியே அவர்கள், டீன் ஆம்ரோஸின் மனதில், ஷீல்ட் ஒரு கைப்பாவையாக மட்டுமே அவரைப் பயன்படுத்துவதாகவும், அவருடைய வாய்ப்புகளையெல்லாம் தட்டிப் பறித்து மற்ற இருவரும் உச்சத்திற்கு சென்றதாகவும் ஆழமாக பதிய வைத்தனர். இதனால் குழப்பமான மனநிலையில் இருந்தார் ஆம்ரோஸ். அதன் பிறகு ஷீல்டின் சண்டைகள் அனைத்திலும் வேண்ட வெறுப்பாகவே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வந்தார்.
சரியாக ரோமன் ரெயின்ஸ் விடைபெற்ற அன்று இரவு (அக்டோபர் 22) நடந்த Tag team சாம்பியன்ஷிப் போட்டியில் ராலின்ஸூம், ஆம்ரோஸூம் வெற்றி பெற்றனர். அவர்கள் அந்த வெற்றியை கொண்டாடும் முன்பே டீன் ஆம்ரோஸ் வெறுப்பின் உச்சிக்கே சென்றிருந்தார் போலும். யாரும் எதிர்பாராத வகையில் ராலின்ஸை சரமாரியாக தாக்கினார் டீன். இதை அங்கிருந்த ரசிகர்கள் உட்பட யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது என்னதான் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட சண்டைதான் என்றாலும் WWE ரசிகர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. அதுவும் ஏற்கனவே ரோமன் ரெயின்ஸ் ஓய்வு பற்றிய அதிர்ச்சியில் இருந்து மீளாதிருந்த WWE ரசிகர்களுக்கு இது மற்றொரு பேரதிர்ச்சியாக இருந்தது.
அதற்கு அடுத்த வாரம் முதல் 'தி லூனடிக் பிரன்ச்' என்றழைக்கப்படும் டீன் ஆம்ரோஸ் க்கும் 'தி கிங்ஸ்லெயர்' சேத் ராலின்ஸ்-க்கும் இடையேயான சண்டை நாளுக்கு நாள் முற்றிக் கொண்டே வந்தது. ஆனால் அவர்கள் இருவரும் நேருக்குநேர் சந்திக்கவில்லை.
அடுத்தது என்ன?
இதற்கு மேலும் இவர்களுக்கு இதைத் தள்ளிப்போட முடியாது. ஆம் டிசம்பரில் நடக்கவிருக்கும் சண்டையில் இவர்களுக்கு இடையேயான பகை மட்டுமே உச்சத்தில் இருக்காது, ராலின்ஸின் சாம்பியன்ஷிப் பெல்ட்டும் உச்சத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும். இதில் வெற்றி பெறுபவருக்கு அந்த சாம்பியன்ஷிப் பெல்ட் சொந்தம். இது ஒரு கொடூரமான போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏன் கொடூரமான போட்டி என்று சொல்கிறேன் என்றால் TLC என்பது அப்படிப்பட்ட ஒரு சண்டை ஆகும். அதன் பெயருக்கு ஏற்ப சண்டையிடுபவர்கள் எதிராளியை, அங்கு அனுமதிக்கப்பட்ட ஆயுதங்கள் எதையும் எடுத்து தாக்கலாம் எந்தவித தவறும் இல்லை.