டபிள்யூ.டபிள்யூ.ஈ (WWE) என்றழைக்கப்படும் பொழுதுபோக்கு விளையாட்டிற்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். இதற்கு முக்கிய காரணமாக அண்டர்டேக்கர், டிரிபிள்-ஹெச், ஸ்டோன் கோல்ட், தி ராக் என பல வீரர்கள் இருந்தாலும் தற்போது இந்தியாவில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் ஒரே வீரர் ‘ரோமன் ரெய்ங்ஸ்’.
இவரின் ‘சூப்பர்மேன் பஞ்ச்’க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிமை. ஆனால் கடந்த அக்டோபர் மாதம் ரோமன் ரெய்ங்ஸ் ‘ரா’ ஷோவில் தனக்கு ‘லுக்கிமியா’ (புற்று நோயின் ஒரு வகை) நோய் இருப்பதாக கூற அவரது ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தான் வென்ற ‘யுனிவர்சல் சாம்பியன்ஷிப்’ பட்டத்தை திரும்பக் கொடுத்து அவர் ‘டபிள்யூ.டபிள்யூ.ஈ’ யில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்ததும் அவரது ரசிகர்கள் அனைவரும் சோகத்திலும் கண்ணீரிலும் ஆழ்ந்தனர்.
‘ரோமன் ரெய்ங்ஸ்’சை கடந்த நான்கு மாத காலமாக பார்க்காமல் சோகத்தில் இருந்த அவரது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை ‘டபிள்யூ.டபிள்யூ.ஈ’ சேர்மன் வின்ஸ் மக்மஹோன் அளித்துள்ளார். ஆம், ரோமன் ரெய்ங்ஸ் திரும்ப வருகிறார் என்ற செய்திதான் அது.
வருகிற திங்கட்கிழமை (இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள ‘ரா’ ஷோவில் ரோமன் ரெய்ங்ஸ் கலந்து கொண்டு, ‘லுக்கிமியா’ நோயினால் பாதிக்கப்பட்ட பிறகு இந்த 4 மாதங்களில் தன்னுடைய உடல் நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றியும், என்னென்ன சிகிச்சைகள் மேற்கொள்கிறார் என்பது பற்றியும் ரசிகர்களிடையே பகிர்ந்து கொள்ளப் போகிறார்.
இதனை வின்ஸ் மக்மஹோன் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தியிருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்கள் பலரும் இந்த செய்தியை சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ரசிகர்கள் மட்டுமல்லாது ‘டபிள்யூ.டபிள்யூ.ஈ’ பிரபலங்களான ‘சாஷா பேங்க்ஸ்’, ‘நட்டாலியா’, ‘பாபி ரூட்’, ‘மேண்டி ரோஸ்’, ‘டைட்டஸ் ஓ நீல்’, ‘டோனி நீஸ்’ உள்ளிட்டோரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் தங்களது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.
ரோமன் ரெய்ங்ஸ் இதுவரை ‘டபிள்யூ.டபிள்யூ.ஈ’யில் படைத்துள்ள சாதனைகள் ஏராளம். இவர் 3 முறை ‘வேர்ல்டு ஹெவி வெயிட்’ சாம்பியன் பட்டத்தையும், ஒரு முறை ‘யுனிவர்சல் சாம்பியன்’ பட்டத்தையும் வென்றுள்ளார். மேலும் தலா ஒரு முறை ‘இண்டர்காண்டிநன்டல்’ சாம்பியன், ‘யூ.எஸ் சாம்பியன்’ மற்றும் ‘டேக் டீம் சாம்பியன்’ பட்டங்களையும் வென்றுள்ளார். மேலும் ஒரே ‘ராயல் ரம்பிள்’ போட்டியில் அதிகம் பேரை வெளியேற்றியவர் (2014-ஆம் ஆண்டு 12 பேரை வெளியேற்றினார்) என்ற சாதனையும் இவர் வசம் உண்டு.
கடந்த 4 ஆண்டுகளாக ‘ரசல்மெனியா’ ஷோவில் ‘மெயின் ஈவெண்ட்’ என்றழைக்கப்படும் முக்கியமான இறுதிப்போட்டியில் இவர் பங்கேற்றுள்ளார். வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ரசல்மெனியா-35 லும் இவர் பங்கேற்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
வருகிற ‘ரா’ ஷோவில் ரோமன் ரெய்ங்சை மீண்டும் காண அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஒருவனாக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.