டபிள்யூ.டபிள்யூ.ஈ (WWE) இன் ‘சேர்மன்’ வின்ஸ் மக்மஹோன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ரோமன் ரெய்ங்ஸ் தற்போது இல்லாததால் தங்களுக்கு தொலைக்காட்சி பார்வையாளர்கள் ரேட்டிங்கில் மிகுந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
‘சூப்பர் மேன் பஞ்ச்’ - இந்த வார்த்தையை எங்கு கேட்டாலும் நமக்கு ஒரே ஒருவர் பெயர் மட்டும் தான் நினைவுக்கு வரும். அவர் தான் ‘ரோமன் ரெய்ங்ஸ்’. ‘ரோமன் ரெய்ங்ஸ்-க்கு உலகம் முழுவதிலும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக இந்தியாவில் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஆனால் கடந்த அக்டோபர் மாதம் ரோமன் ரெய்ங்ஸ், தான் ‘லுக்கிமியா’ (புற்றுநோயின் ஒருவகை) நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். மேலும் அவர் வென்றிருந்த ‘யுனிவர்சல் சாம்பியன்’ பட்டத்தையும் திரும்பக் கொடுத்து விட்டு தற்காலிகமாக ‘டபிள்யூ.டபிள்யூ.ஈ’ யை விட்டு விலகினார்.
இந்நிலையில் ‘டபிள்யூ.டபிள்யூ.ஈ’ சேர்மன் வின்ஸ் மக்மஹோன் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், “ரோமன் ரெய்ங்ஸ் புற்றுநோயின் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் விலகியதை அடுத்து எங்களின் தொலைகாட்சி பார்வையாளர் எண்ணிக்கை (ரேட்டிங்) வெகுவாக குறைந்து விட்டது. அவர் (ரெய்ங்ஸ்) எங்கள் நிறுவனத்தின் முகமாக திகழ்ந்தார். மேலும் அவர் எங்களின் யுனிவர்சல் சாம்பியனாகவும் இருந்தார். அந்த நேரத்தில் அவர் விலகியது எங்களுக்கு பெரும் பாதிப்பு ஆகிவிட்டது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “எங்களின் வீரர்கள் கடந்த சில மாதங்களாக அதிக காயங்களைச் சந்தித்துள்ளனர். முன்னணி வீரர்கள் காயம் அடைந்து விலகும் பொழுது அது எங்கள் நிறுவனத்திற்கும் பெரும் பாதிப்பு ஆகிவிடுகிறது. அதில் ரோமன் ரெய்ங்ஸ்-இன் விலகல் மிக முக்கியமானதாகும்”.
“சமீபத்தில் காயமடைந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பட்டியல் நீளமாகவே இருக்கிறது. எங்களின் முக்கிய வீராங்கனைகளான பெக்கி லிஞ்ச் மற்றும் சார்லட் பிளேர் ஆகியோர் சமீபத்தில் காயமடைந்துள்ளனர். மேலும் கெவின் ஓவென்ஸ், சேமி சேயின், அலெக்ஸா பிளிஸ், பிரான் ஸ்ட்ரோமன், பிரே ஒயிட், டீன் அம்புரோஸ், எம்பர் மூன், சமோ ஜோ, ஏக்கம், ஜேசன் ஜோர்டான், ஃபண்டாங்கோ, பிக் ஷோ, செத் ரோலின்ஸ் ஆகியோரும் காயத்தால் அவதிப்படுகின்றனர்”.
“இது போன்றதொரு மோசமான நிலைமை இதற்கு முன்பு எங்களுக்கு வந்ததில்லை. தங்களுக்கு பிடித்த வீரர், வீராங்கனைகள் இல்லாத போது போட்டியை தொலைக்காட்சியில் காண்பதற்கு ரசிகர்கள் விரும்புவதில்லை. மேலும் ‘லைவ் ஈவெண்ட்’ போட்டிகளை காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் தற்போது குறைவாகவே உள்ளது”. இவ்வாறு வின்ஸ் மக்மஹோன் கூறினார்.
ரோமன் ரெய்ங்ஸ்-இன் விலகலுக்கு பிறகு ‘டபிள்யூ.டபிள்யூ.ஈ’ தனது பார்வையாளர்கள் ரேட்டிங்கை வெகுவாக இழந்து, கடந்த டிசம்பர் மாதம் மிகவும் மோசமான ரேட்டிங் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் சமீபத்திய சில வாரங்களில் ரேட்டிங் (சராசரியாக சுமார் 2.5 மில்லியன் பார்வையாளர்கள்) கணிசமாக உயர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கடந்த மாதம் நடந்த ‘ராயல் ரம்பிள்’ போட்டியில் ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற ‘செத் ரோலின்ஸ்’ மற்றும் ‘பெக்கி லிஞ்ச்’ ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களின் வெற்றியே ரசிகர்களை மீண்டும் இந்த போட்டிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
தற்போது ‘லுக்கிமியா’ நோய்க்காக வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வரும் ‘ரோமன் ரெய்ங்ஸ்’ விரைவில் மீண்டு வந்து நம்மை மகிழ்ச்சிப்படுத்துவார் என எதிர்பார்ப்போம்.
செய்தி : விவேக் இராமச்சந்திரன்