டபல்யூ.டபல்யூ.ஈ (WWE) மல்யுத்தப் போட்டியில் களமிறங்குவாரா எம்.எஸ்.தோனி?

Dhoni in WWE?
Dhoni in WWE?

டபல்யூ.டபல்யூ.ஈ (WWE) பொழுதுபோக்கு மல்யுத்த போட்டியை பற்றி தெரியாதவர்கள் இந்தியாவில் மிகச் சிலர் தான் இருப்பார்கள். இந்தியாவில் மிகப் பிரபலமாக இருக்கும் இந்த டபல்யூ.டபல்யூ.ஈ தனது ட்விட்டர் பக்கத்தில் இட்ட ஒரு டுவீட் கிரிக்கெட் ரசிகர்களிடையே, அதிலும் குறிப்பாக தோனி ரசிகர்களிடையே மிகப்பெரிய பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து இங்கே காண்போம்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை பெற்றார். இதை பாராட்டி ஐசிசியின் ட்விட்டர் பக்கத்தில், “சாப்பிடு, உறங்கு, போட்டியை முடி, அதையே திரும்ப செய்” (Eat,Sleep,Finish,Repeat) எனப் பாராட்டி குறிப்பிட்டு இருந்தது.

இதை பார்த்த தற்போதைய ‘டபல்யூ.டபல்யூ.ஈ’ இன் சாம்பியனான ‘ப்ராக் லெஸ்னர்’ன் மேனேஜராக செயல்பட்டு வரும் ‘பால் ஹெய்மன்’ தோனியை பாராட்டியதோடு, அவர்கள் குறிப்பிட்டுள்ள வாழ்த்து வாசகம் தான் உருவாக்கியது என்பதாகவும் மேலும் அதற்கு தனக்கு ராயல்டி வழங்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

Brock lesnar
Brock lesnar

அதைப் கண்ட அவருக்கு பதில் அளிக்கும் விதமாக “உங்களுக்கும் (பால் ஹெய்மன்), ப்ராக் லெஸ்னர்கும் இங்கிலாந்தில் நடைபெறும் 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண்பதற்கான டிக்கெட்டை இலவசமாக வழங்குகிறோம்” என அறிவித்திருந்தது ஐசிசி.

இதை மேலும் சுவாரஸ்யமாக்கும் விதத்தில் ‘டபல்யூ.டபல்யூ.ஈ’(WWE) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “நீங்கள் எம்.எஸ்.தோனியை விரைவில் நடைபெற உள்ள ‘ராயல் ரம்பிள்’ போட்டியில் காண விரும்புகிறீர்களா”? எனக் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது. இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வரவேற்று கருத்துக்களையும், மீம்ஸ் களையும் வெளியிட்டு வருகின்றனர்.

‘ராயல் ரம்பிள்’ போட்டி டபல்யூ.டபல்யூ.ஈ நிர்வாகத்தால் ‘ரசல்மேனியா’விற்கு பிறகு பிரமாண்டமாக நடைபெறும் மல்யுத்தப் போட்டி ஆகும். இந்த வருடத்துக்கான ராயல் ரம்பிள் போட்டி வருகிற 28-ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இது இந்திய நேரப்படி 29-ஆம் தேதி அதிகாலை 5:30 மணியளவில் தொடங்கும்.

இதில் நடைபெறும் ‘யுனிவர்சல் சாம்பியன்ஷிப்’ போட்டியில் தற்போதைய சாம்பியனான ப்ராக் லெஸ்னர் தனது சக வீரர் ‘ஃபின் பாலரை’ எதிர்கொள்கிறார். மேலும் இதில் நடைபெறும் 30 பேர் பங்கேற்கும் ‘ராயல் ரம்பிள்’ போட்டி முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகும்.

இந்த 30 பேர் பங்கேற்கும் இந்த போட்டியில் தான் தோனி கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பும் நிலவிக் கொண்டிருக்கிறது. ஆனால் தற்போதைய நிலையில் தோனி, இந்திய அணிக்காக நியூசிலாந்தில் தற்போது நடைபெற்றுவரும் ஒருநாள் போட்டித் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதல் போட்டியை இந்திய அணி எளிதில் வென்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தோனி ராயல் ரம்பிள் போட்டியில் கலந்து கொள்வது சாத்தியமில்லை என்று பொழுதும், சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற ‘டபல்யூ.டபல்யூ.ஈ’ நிறுவனம் தோனியை குறிப்பிட்டு டீவீட் செய்திருப்பது தோனி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.