இந்தக் கட்டுரையில் நாம் நடப்பில் WWE-ல் இயங்கிக் கொண்டிருக்கும் மிகவும் பணக்கார வீரர்கள் ஐந்து பேரைப் பற்றிப் பார்க்கலாம். இதில் ராக், அன்டர் டேக்கர், ஸ்டோன் கோல்ட் மற்றும் க்ரிஸ் ஜெரிக்கோ ஆகியோரைப் பற்றிப் பார்க்கப்போவது கிடையாது. காரணம், அவர்கள் தற்போது தொடர்ச்சியாகச் சண்டையிடுவது கிடையாது. அதேபோல் ட்ரிபிள் எச், மெக்மான் குடும்ப உறுப்பினர் என்பதால் அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்படும் நெட் ஒர்த் எனப்படுவது அவருக்குச் சொந்தமான நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத சொத்துக்களின் மதிப்பாகும். மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள ராக்கின் நெட் ஒர்த் எனப்படும் நிகர மதிப்பு 220 மில்லியன் டாலர்கள் ஆகும். ஒரு WWE நட்சத்திரமாக வேண்டும் என்ற கனவு அதனைப் பார்க்கும் அனைவருக்கும் ஒருமுறையாவது தோன்றியிருக்கும். WWE-ல் சேர வேண்டும் என்பதே அனைத்து தொழில்முறை மல்யுத்த வீரர்களுக்கான உச்சபட்ச குறிக்கோளாக இருக்கும். இவ்வாறு அவர்கள் நம்புவதற்கு பல காரணங்கள் உண்டு, அதிலும் குறிப்பாக இதில் பிரபலமாகக் கிடைக்கும் வாய்ப்புகள் உலகில் உள்ள வேறு எந்தத் துறையிலும் கிடையாது. எனவே நீங்கள் ஒரு WWE நட்சத்திரம் என்றால் உலகறியப்பட்டவரே என்பது நிதர்சனம். மேலும் பிரபலம் என்பதையும் தாண்டி இதற்காக நீங்கள் பெறும் சம்பளத்திற்கான காசோலையின் மதிப்பு வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது. இதனாலேயே பலர் தாங்கள் இருந்த உயரிய வேலைகளையும் விட்டுவிட்டு இங்கு வந்துள்ளனர் (மைக் கேனல்லிஸைப் போல).
#5. கெவின் ஓவென்ஸ்
கெவின் ஸ்டீன் என்று அழைக்கப்படும் இவர் பல காலமாக WWE ல் இருக்கும் வீரர் கிடையாது. இவர் WWE க்கு சரியாக 2014 ஆம் ஆண்டு தான் வந்தார்.
ஆனால் வந்த வேகத்திலேயே அங்கு பலகாலமாக இருக்கின்ற வீரர்களான கெய்ன் மற்றும் ஷேமிஸ் ஆகியோரைவிட தன் மதிப்பை அதிகப்படுத்திக் கொண்டார்.
எப்படியிருந்தாலும் கெவின் ஓவென்ஸ் தொழில்முறை மல்யுத்தத்தில் 2000 ஆம் ஆண்டுலிருந்தே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் WWE ல் நான்கு வருடங்களுக்குள்ளாகவே அவரின் வளர்ச்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆம் இன்றைய இவரது நெட் ஒர்த் எனப்படும் நிகர மதிப்பு 10 மில்லியன் டாலர்கள் ஆகும். இது அங்குள்ள வீரர்களான கெய்ன் மற்றும் ஷேமிஸ் ஆகியோரைவிட அதிகம். அவர்களின் நிகர மதிப்பு 7 மில்லியன் டாலர்கள் ஆகும்.
#4. ஜெஃப் ஹார்டி
தி கரிஸ்மாடிக் எனிங்மா என்ற புனை பெயரில் அழைக்கப்படும் ஜெஃப் ஹார்டி மிகவும் திறமையான மல்யுத்த வீரர்களில் ஒருவர். ஜெஃப் ஹார்டி அக்டோபர் 3, 1993 ல் அவரது முதல் தொழில்முறை மல்யுத்தத்தில் அறிமுகமானார். இவர் WWE ல் மட்டுமல்லாமல் TNA எனப்படும் மற்றொரு தொழில்முறை மல்யுத்த நிறுவனத்திலும் இருந்துள்ளார். ஜெஃப் ஹார்டி WWEல், டிரிபிள் க்ரௌன் மற்றும் க்ராண்ட் ஸ்லாம் சாம்பியன் ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். மேலும் இவர் TNA வில் இரண்டு முறை டேக் டீம் சாம்பியனாகவும், மூன்று முறை வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியனாகவும் இருந்துள்ளார். ஜெஃப் ஹார்டி மிகவும் திறமையான மல்யுத்த வீரர்களில் ஒருவர்.
மல்யுத்தம் மட்டுமே இந்த "ரெயின்போ ஹேர்டு வாரியர்" க்கு சிறப்பம்சம் அன்று. இவர் ஒரு சிறந்த பாடகர், பாட்டு எழுத்தாளர் மற்றும் தலைசிறந்த ஓவியரும் ஆவார். மேலும் இவர், பெரோக்ஸ்ஒய் ஜென் என்றழைக்கப்பட்ட ஒரு பிரபலமான ராக் பேண்ட் இசைக்குழுவில் இருந்துள்ளார். இதுமட்டுமின்றி டி சர்ட்கள், இசைத் தட்டுகள் மற்றும் இன்னும் பல இசை சார்ந்த பொருட்களை விற்கும், 'ஜெஃப்ஹார்டிபிரான்ட்.காம்' என்ற இணையதளத்தையும் நடத்தி வருகிறார். இவரது இன்றைய நெட் ஒர்த் (நிகர மதிப்பு) 12 மில்லியன் டாலர்கள் ஆகும்.
#3. ரான்டி ஆர்டன்
ரான்டி ஆர்டன் பிறக்கும்போதே மல்யுத்த குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். ஆம் இவரது தந்தை மற்றும் தாத்தா ஆகிய இருவரும் மல்யுத்த வீரர்களாவர். இதனாலேயே இவரும் WWE-யைத் தேர்ந்தெடுத்தார். இவர் தன் தந்தையொடு 2000 ஆம் ஆண்டு WWE-வில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாகவும் WWE-வில் ஒப்பந்தமானார். இருப்பினும் இவர் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்ள 'ஓஹியோ வேலி ரெஸ்ட்லிங்' என்னும் பயிற்சி மையத்திற்கு சென்றார்.
இவர் கடந்த 17 ஆண்டுகளில் WWE ல் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும் பெற்றுவிட்டார். ஆம் 'வைப்பர்' என்றழைக்கப்படும் இவர் 13 முறை WWE ல் சாம்பியனாகவும், கிரான்ட் ஸ்லாம் சாம்பியனாகவும், இரண்டு முறை ராயல் ரம்பள் வின்னராகவும் இருந்துள்ளார்.
மேலும் இவர் தி கன்டம்டட் 2, 12 ரவுண்ட்ஸ், 2: ரீ லோடட் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவரின் இன்றைய நெட் ஒர்த்(நிகர மதிப்பு) 15 மில்லியன் டாலர்கள் ஆகும்.
#2. ப்ராக் லெஸ்னர்
தான் இருக்கும் இடம் எதுவானாலும் வெற்றியைத் தன்வசப்படுத்தும் அரிய வீரர்களில் ப்ராக் லெஸ்னரும் ஒருவர். ஆம் அது WWE ஆக இருந்தாலும் சரி, UFC எனப்படும் கூண்டிற்குள் உண்மையாகவே சண்டையிடும் போட்டியாக இருந்தாலும் சரி. இவர் தான் வெற்றியாளர். இதனாலேயே இவர் அதிகம் சம்பாதிக்கும் WWE வீரராகவும், அதிகமாகப் பந்தைய பணம் கொடுத்து வாங்கப்படும் ஒரு MMA சண்டையாளராகவும் விளங்குகிறார்.
ப்ராக் லெஸ்னர் மீண்டும் 2012 ஆம் ஆண்டு இரண்டு நிறுவனங்களுக்கு திரும்பியது முதல் இவரின் சம்பளம் பற்றிய விவாதங்களே பேசு பொருளாக இருந்து வருகிறது. மேலும் இவர் WWE க்கு வரும் முன்னரே பல மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர் வருடத்திற்கு குறிப்பிட்ட ஒருசில முறை மட்டுமே WWE க்குள் பிரவேசிப்பார்.
'பீஸ்ட்'(மிருகம்) என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவரின் இன்றைய நெட் ஒர்த் எனப்படும் நிகர மதிப்பு 22 மில்லியன் டாலர்கள் ஆகும்.
#1. ஜான் ஸீனா
'சினேஷன்' (cenation) தலைவனான ஜான் ஸீனா தன் திறமையால் பலதரப்பட்ட விவாதங்கள் மற்றும் அனைத்து வகை பாராட்டுகளையும் பெற்று குழந்தைகளால் மட்டுமே விரும்பப்படும் வகையிலிருந்து தாண்டி ஒரு மிகப்பெரிய நட்சத்திர வீரராகத் திகழ்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. ஜான் ஸீனா கிட்டத்தட்ட பத்து வருடங்களாக WWE-ன் முகமாக விளங்கினார். மேலும் இவர் WWE-ல் செய்த சாதனை, இதுவரை 16 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். இவர் WWE க்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் வீரராகவும் இருந்தார். இதனால் இவர் தற்போதுள்ள இந்தப் பணக்கார வீரர்களின் வரிசையில் முதலிடம் பிடித்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை.
ஜான் ஸீனா இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் 12 ரவுண்ட்ஸ் மற்றும் தி மரைன் போன்றவை குறிப்பிடத்தக்கன. 'டாக்டர் ஆஃப் தங்னோமிக்ஸ்' என்றழைக்கப்படும் இவர் 'யூகான்ட் ஸீ மி' என்ற இசை ஆல்பத்தையும் வெளியிட்டுள்ளார்.
WWE-ஐத் தாண்டிப் பல துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஜான் ஸீனாவின் வியக்கவைக்கும் நெட் ஒர்த் எனப்படும் நிகர மதிப்பு 55 மில்லியன் டாலர்கள் ஆகும்.
எழுத்து: சில்வர் ப்ளேஸ்
மொழியாக்கம்: அகன் பாலா