இந்த வருட ஐபில் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மிகவும் மோசமான முறையில் தோல்வியடைந்தது.
சென்னை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 70 ரன்களுக்கு சுருண்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் பொறுமையாக விளையாட தவறியதே இதற்கு காரணம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்ப்பந்து வீச்சாளர்களான ஹர்பஜன் சிங் மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இதன் பின்பு பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டின. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது முதல் போட்டியை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வியாழன் அன்று நடைபெற உள்ள இரண்டாவது போட்டியில் மும்பை அணியை வெல்ல வியூகங்களை வகுத்து வருகின்றது.
இவற்றில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நிகழ வாய்ப்புள்ள 2 மாற்றங்களை பற்றி பார்க்கலாம்.
1. சைனிக்கு பதிலாக சவுதி
இந்த வருடம் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பங்கேற்ற பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்தார் சைனி. இப்போட்டி இவருக்கு ஐபிஎல் தொடரில் முதல் போட்டி ஆகும். இப்போட்டியில் பங்கேற்ற இவர் 4 ஓவர்களில் 24 ரன்களை வழங்கினார். தற்பொழுது அணியில் அனுபவம் வாய்ந்த வீரர் சவுதி இருப்பதால் சைனிக்கு பதிலாக களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு அணியின் ஆடுகளம் பேட்டிங்கிற்க்கு சாதகமாக இருப்பதாலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசை பலம் வாய்ந்ததாக இருப்பதாலும் சைனி அதிக ரன்களை வழங்க அதிக வாய்ப்புள்ளது.
இதுமட்டுமன்றி, சவுதியின் பந்துவீச்சு பெங்களூரு ஆடுகளத்திற்கு சாதகமாக இருந்து வந்துள்ளது, இதன் மூலம் பவர் பிளே ஓவர்களில் மும்பை அணியின் விக்கெட்டுகளை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. இவர் கடைசிக்கட்ட ஓவர்களிலும் அசத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. மொயீன் அலிக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மொயீன் அலி மூன்றாவதாக களமிறங்கினார், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் 9 ரன்களில் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பந்துவீச்சில் 4 ஓவர்களில் 19 ரன்களை வழங்கியிருந்தாலும் அணியில் இடம் பெற இது போதுமானதாக இல்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொயீன் அலிக்கு பதிலாக அணியில் உள்ள மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு ஆடுகளம் இவருக்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கலாம் அதுமட்டுமின்றி இவர் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். மேலும், ஒரு அணியில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களுக்கே அனுமதி என்பதால் சவூதி மற்றும் சுந்தர், சைனி மற்றும் மொயீன் அலிக்கு பதிலாக விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது