12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி ஆரம்பமாகி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன ஐபிஎல் போட்டிகள்.
பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. வழக்கம் போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதற்கு முழுமுதல் காரணம் ரசிகர்களால் 'தல' என்று செல்லமாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனியே என்று சொன்னால் மிகையாகாது. அவர் தனது தலைமை பண்பு, பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறமைகளால் அணியை தனி ஆளாக தனது தோளில் சுமந்து வருகிறார். அவரே இந்த ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிகபட்ச ரன்களை குவித்தவர் ஆவார்.
அவர் விளையாடாத இரண்டு போட்டிகளிலுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக தோற்றதே தோனியின் பங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எவ்வளவு அளப்பரியது என்பது புரியும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக சொந்த ஊரில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எளிதில் வென்று புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது. காய்ச்சல் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அணிக்கு திரும்பினார்.
அவரின் இருப்பு சென்னை அணிக்கு எந்தளவுக்கு முக்கியம் என்பதை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நிரூபித்து காட்டினார். பேட்டிங்கில் 22 பந்துகளில் 44 ரன்களும், தனது மின்னல் வேக ஸ்டம்பிங்கின் மூலமாக இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்த உதவினார். அந்த இரண்டு ஸ்டம்பிங்குமே மிகவும் புத்திசாலித்தனமாக செய்யப்பட்டது. தோனியின் தலைமை பண்பு மற்றும் பேட்டிங் ஆகியவற்றை பற்றி மட்டுமே நாம் பேசிக்கொண்டிருப்போம்.
ஆனால் அவரது ஸ்டம்பிங் செய்யும் திறமையை பற்றி அவ்வளவாக நாம் பேசியதில்லை. பேட்ஸ்மேன்கள் ஒரு மில்லி செகண்ட் கிரீசை விட்டு காலை எடுத்தாலும் அவர் தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு விடுவார். தோனி பந்தை பிடித்தவுடனே கண்ணை மூடிக்கொண்டு ஸ்டம்பை அடிக்கமாட்டார். பேட்ஸ்மேன் காலை தூக்கும் அந்த நொடி வரை காத்திருந்து ஸ்டம்பிங் செய்வார். இது எல்லாமே சில நொடிகளில் நடப்பவை ஆகும்.
இப்போது உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் தோனி என்றால மிகையாகாது. தோனி தற்போது ஐபிஎல்லில் ஒரு புதிய சாதனையை படைக்க காத்துள்ளார். ஐபிஎல்லில் விக்கெட் கீப்பிங்கின் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் தினேஷ் கார்த்திக் 130 முறை அவுட் செய்து முதலிடத்தில் உள்ளார் . தோனி 128 முறை அவுட் செய்து இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆச்சரியம் அளிக்கும் வகையில் ராபின் உத்தப்பா 90 அவுட் செய்து இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் கண்டிப்பாக இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாடும். அந்த இரண்டு போட்டிகளிலும் குறைந்தது 3 பேரை விக்கெட் கீப்பிங் மூலம் அவுட் செய்தாலே இந்த பட்டியலில் தோனி முதலிடத்திற்கு முன்னேறிவிடுவார். கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது சற்று கடினமே. ஆதலால் தோனிக்கு இந்த சாதனையை படைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச டி20 போட்டிகளில் 91 முறை விக்கெட் கீப்பிங்கின் மூலம் அவுட் செய்து முதலிடத்தில் உள்ளார் தோனி.