ஐபிஎல் 2019 : தன்னை கிண்டல் செய்த ரசிகருக்கு தைரியமான  முறையில் பதிலளித்த உனத்கட் 

Jaydev Unadkat - Image Courtesy (BCCI/IPLT20.com)
Jaydev Unadkat - Image Courtesy (BCCI/IPLT20.com)

12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி ஆரம்பமாகி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் நடையைக் கட்டின.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் 11 புள்ளிகள் மட்டுமே பெற்று 7வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அந்த அணியின் தோல்விக்கு நிறைய காரணங்கள் உண்டு என்ற போதிலும், முக்கியமான காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான ஜெய்தேவ் உனத்கட் மற்றும் தவால் குல்கர்னி ஆகியோர் சரியாக விளையாடாததே காரணமாகும். குறிப்பாக ஜெய்தேவ் உனத்கட்டின் பவுலிங் மோசமாக இருந்தது.

2018 ஆம் ஆண்டு ஏலத்தின் போது உனத்கட்டை 11 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் போன இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் உனத்கட். அந்த சீசனில் சுமாராக விளையாடியதால் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். 2019 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மறுபடியும் உனத்கட்டை 8.4 கோடிக்கு வாங்கியது. இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் போன இந்திய வீரர் என்ற பெருமையை வருண் சக்ரவர்த்தியுடன் பெற்றார். இந்த ஐபிஎல் தொடரிலும் உனத்கட்டின் பவுலிங் மிகவும் மோசமாக இருந்தது. அவரால் ஒரு போட்டியில் கூட அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. அவரது எகானமி விகிதம் 10.66 ஆக இருந்தது.

இதனால் ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் ஒரு ரசிகர் அவரை ஒரு நல்ல கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து பவுலிங் பயிற்சி பெற்று விட்டு அடுத்த வருட ஐபிஎல் போட்டிகளுக்கு வரவும் என கிண்டல் செய்து இருந்தார். இதற்கு ஜெய்தேவ் உனத்கட் மிகவும் தைரியமான முறையில் பதிலளித்து உள்ளார். அவர் அந்த ரசிகருக்கு இப்படி பதிலளித்திருந்தார்:

"ஆம் நண்பா, நான் ஏற்கனவே ஒரு கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்திருக்கிறேன் நான் கிரிக்கெட்டை ரசித்து விளையாடும் வரை அந்த அகாடமியில் நீடித்து இருப்பேன். ஏனென்றால் கற்றுக் கொள்ளுதல் எப்போதுமே நிற்காது. வெற்றி பெற்றாலும் தோல்வி பெற்றாலும் அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளலாம். என் மீது நீங்கள் ஏகப்பட்ட அவமானங்களை தூக்கி வீசி இருக்கிறீர்கள், அதிலிருந்து நீங்களும் ஏதாவது ஒரு பாடத்தை கற்றுக்கொண்டு இருப்பீர்கள்" என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் அந்த ரசிகருக்கு பதிலளித்தார். மேலும் உனத்கட் இந்த சீசனில் சரியாக விளையாடாததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் கூறியதாவது : "எனது உண்மையான ரசிகர்களுக்கும் கிரிக்கெட்டை விரும்புகிற வர்களுக்கம் இந்த சீசனில் சரியாக விளையாடாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த மன்னிப்பு அடுத்தவரின் துன்பங்களை கண்டு மகிழ்ச்சி அடைவோருக்கு இல்லை. நான் எனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுள்ளேன், நான் இந்த தோல்விகளில் இருந்து மீண்டு வருவேன்".

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Quick Links