ஐபிஎல் 2019 : DD vs KXIP ஆட்டத்தின் சிறந்த கேப்டன்சி நகர்வு

Image from. yesterday' match
Image from. yesterday' match

12வது சீசன் ஐபிஎல் போட்டியின் 37வது லீக் போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையே நடைபெற்றது. இந்த போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சொந்த ஊரான டெல்லியில் நடந்தது. டாஸ் வென்ற டெல்லி அணி பெரோஷா கோட்லா மைதானத்தின் மெதுவான தன்மையை கருத்தில் கொண்டு முதலில பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணிக்கு கேஎல் ராகுலும் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லும் தொடக்கம் தந்தனர். ராகுல் இரண்டாவது ஓவரிலேயே சந்தீப் லாமிச்சானே பந்துவீச்சில் ரிஷப் பண்ட்டால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

அதன் பின்னர் வந்த பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் கிரீசுக்கு வருவதும் பெவிலியனுக்கு திரும்புவதுமாக இருந்தனர். மயங்க் அகர்வால், டேவிட் மில்லர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மறுபுறம் கிறிஸ் கெயில் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து கொண்டிருந்தார். மன்தீப் சிங்கை தவிர யாரும் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்த ஐபிஎல்லில் நல்ல பார்மில் உள்ள கிறிஸ் கெய்ல் இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். அவர் சிக்சர்களை அனாயாசமாக பறக்க விட்டார். இந்த ஐபிஎல்லில் டேவிட் வார்னருக்கு பின் 400 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் கிறிஸ் கெய்ல். ஆட்டத்தின் இந்த கட்டத்தில் தான் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் சுழற்பந்து வீச்சாளர் லாமிச்சானேவை பந்து வீச அழைத்தார். இதற்கு முன்னால் ஒரு ஓவர் வீசி இருந்தார் லாமிச்சானே. அந்த ஓவரில் 4 பவுண்டரிகளை அடித்திருந்தார் கெய்ல். அதனால் இந்த முடிவு கைகொடுக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஸ்ரேயாஸ் அய்யரின் இந்த முடிவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஒரே ஓவரில் கெய்ல் மற்றும் சாம் கரன் ஆகிய இருவரது விக்கெட்டையும் வீழ்த்தி கேப்டன் தன் மேல் வைத்த நம்பிக்கையை காப்பாற்றினார் லாமிச்சானே.

அதிரடி ஆட்டக்காரர்கள் அனைவரும் அவுட்டானதால் கடைசி கட்டத்தில் ரன்களை எடுக்க பஞ்சாப் அணி திணறியது. முதல் பத்து ஓவர்களில் 92 ரன்களை குவித்த பஞ்சாப் அணி கடைசி பத்து ஓவர்களில் 71 ரன்களே எடுத்தது.

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு தவானும் பிரித்வி ஷாவும் சுமாரான துவக்கத்தை அளித்தனர். பிரித்வி ஷா 11 ரன்களில் தவானின் கவனமின்மை காரணமாக ரன் அவுட் ஆக வேண்டிய நிலை வந்தது. தான் செய்த தவறுக்கு பரிகாரம் செய்த தவான் அரைசதம் அடித்து தன் அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றார். அவர் ஐபிஎல்லில் தனது 35வது அரைசதத்தை அடித்தார்.

13வது ஓவரின் போது பந்து வீசிய அஸ்வின், பட்லரை "மேன்கட்" ரன் அவுட் செய்தது போல தவானுக்கும் செய்ய பார்த்தார். ஆனால் தவான் உஷாராக கிரீசுக்கு உள்ளேயே இருந்தார். அடுத்த பந்தை அஸ்வின் வீசிய போது தவான் கிரீசை விட்டு வெளியே வருவது போல வேடிக்கை காட்டி அஸ்வினை கலாய்த்தார். ஆனால் அடுத்த ஓவரிலேயே அஸ்வின் அவரை அவுட்டாக்கினார். ஆனாலும் அவர் தன் வேலையை சரியாக செய்து முடித்திருந்தார். தவானுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்த ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்தார். கடைசி கட்டத்தில் டெல்லி அணி விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தது. ஆனால் ஸ்ரேயாஸ் அய்யர் தன் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Quick Links

Edited by Fambeat Tamil