12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. பின்னர் பேட்டிங் செய்ய வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் இந்த இலக்கை எட்டிப் பிடித்தது. இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் பெரும் சர்ச்சை வெடித்தது. பென் ஸ்டோக்ஸ் வீசிய நான்காவது பந்தை நோபால் என்று கள நடுவர் அறிவித்தார். ஆனால் அது நோ பால் இல்லை என்று லெக் அம்பயர் முடிவை மாற்றி அமைத்தார்.
இதனால் கோபமடைந்த சென்னை அணியின் கேப்டன் தோனி தன்னுடைய முகாமில் இருந்து நேராக மைதானத்திற்குள் வந்து நடுவர்களிடம் எப்படி முடிவை மாற்றினீர்கள் என்று நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் . இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.போட்டி முடிந்த பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தோனியின் இந்த செயல் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது....
நாங்கள் புரிந்து கொண்ட விதத்தின் படி பந்துவீச்சாளர் முனையில் இருந்த நடுவர் அந்த பந்தை நோ பால் என்று அறிவித்தார். அந்த பந்து சரியானதே என்று லெக் அம்பயர் கூறினார். அதனால் இந்த முடிவை மாற்றியமைக்க இரு நடுவர்களும் முடிவு செய்தனர். அது சரியான பந்தா இல்லையா என்பதே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அந்த விஷயத்தில் தோனிக்கு தெளிவு கிடைக்கவில்லை. மூன்றாவது நடுவரை வைத்து அந்த முடிவை பரிசீலித்து இருக்கலாம். அவர்கள் ஏன் அதை செய்யவில்லை இன்று கேட்பதற்காகவே தோனி களத்திற்குள் சென்றார். அந்த பார்வையிலேயே நானும் அவரும் இந்த விஷயத்தை விவாதித்தோம். தோனி செய்தது தவறுதான் என்றும் பிளமிங் ஒப்புக்கொண்டார். இருந்தாலும் ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் தோனியின் உணர்வுகள் அவரை தெளிவுபெற வைப்பதற்காக அப்படி செய்ய வைத்துவிட்டது. அவர் அம்பயர்கள் முடிவை மாற்றியதால் சற்று கோபம் அடைந்தார். அந்த விஷயத்தில் அவர்களிடமே தெளிவு இல்லை. அதனாலேயே அவர் அப்படி செய்ய வேண்டியதாகிவிட்டது. அவரிடம் இந்த சம்பவம் குறித்த கேள்வி நீண்ட நாட்களுக்கு கேட்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று அவர் கூறினார்.
இந்நிலையில் தோனி ஐபிஎல் போட்டிகளின் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக அவருக்கு பிசிசிஐ 50 சதவீத போட்டி கட்டணத்தை அபராதமாக விதித்துள்ளது. இந்த மாதிரி செயல்களை இனிமேல் தோனி செய்ய மாட்டார் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகனாக தோனி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி தன்னுடைய அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியை ஞாயிறு அன்று எதிர்கொள்கிறது.