12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தன் சொந்த ஊரான ஜெய்ப்பூரில் எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார் . அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானேவும் பட்லரும் களம் இறங்கினர்.
ஆரம்பம் முதலே அடித்து ஆட ராஜஸ்தான் அணி வீரர்கள் முயற்சி செய்தனர். குறிப்பாக பட்லர் பவுண்டரிகளாக விளாசினார். இதுவே கடைசியில் அவருக்கு வினையாக முடிந்தது. அவசரகதியில் ரன்களை சேர்க்க முற்பட்டதால் மோசமான ஷாட்டால் தன் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பிறகு ரகானேவும் அவுட்டானார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் பிரமாதமாக இருந்தது. ஸ்டீவ் ஸ்மித்தும் ராகுல் திரிபாதியும் அணியை மீட்டெடுக்க போராடினர். ஆனால் அதற்கு எந்த பலனும் இல்லாமல் போனது. கேதார் ஜாதவின் அற்புதமான கேட்சால் ராகுல் திரிபாதி அவுட்டானார்.
கொஞ்ச நேரத்திலேயே ஸ்மித்தும் அவுட்டானார். அறிமுக வீரர் ரியான் பராக்கும் ஸ்டாக்ஸூம் அணியை சவாலான ஸ்கோரை நோக்கி எடுத்துச் சென்றனர். ஆனால் அந்தக் கூட்டணியும் பிரிந்தது. பென் ஸ்டோக்ஸ் தனது நல்ல தொடக்கத்தை பெரிய ஸ்கோர் ஆக மாற்ற தவறினார். கடைசி கட்டத்தில் ஷ்ரேயாஸ் கோபால் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சரின் அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 150 ரன்களை கடந்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஷேன் வாட்சன் முதல் ஓவரிலேயே குல்கர்னி பந்தில் கிளீன் போல்டானார். பின்னர் வந்த ரெய்னாவும் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன் அவுட் ஆனார். கேதார் ஜாதவ் பென் ஸ்டோக்சின் அபாரமான கேட்ச்சால் பெவிலியன் திரும்பினார். பின்னர் டூ பிளசிஸ்ஸூம் அவுட்டானார். அப்போது சென்னை அணி 24க்கு 4 என்று பரிதவித்து கொண்டிருந்தது.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் தோனியும் அம்பத்தி ராயுடுவும் அணியை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர் . ரகானே எல்லா பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்தி இந்த கூட்டணியை பிரிக்க முயற்சி செய்தார். ஆனால் அதற்கு எந்த பயனும் இல்லை. சுழற் பந்து வீச்சாளர்களுக்கு இந்த பிட்சில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஆனால் ரகானே சுழற்பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். 10 ஆவது ஓவரில் முடிவின் போது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு 10 ஓவர்கள் மீதம் இருந்தது. ஆனால் அவர் அறிமுக சுழற்பந்து வீச்சாளரான பராக்கிற்கு பதினோராவது ஓவரை கொடுத்தார்.
அதுவே மிகப்பெரிய கேப்டன்சி தவறாக முடிந்துவிட்டது. அந்த ஓவரை சென்னை அணி நன்றாக பயன்படுத்திக் கொண்டது. அந்த ஓவரில் மட்டும் தோனியும் ராயுடுவும் 14 ரன்கள் சேர்த்தனர். இந்த ஓவரே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். ரகானே இந்த ஓவரை ஸ்டோக்ஸ் அல்லது குல்கர்னிக்கு கொடுத்திருக்க வேண்டும் என்று கூறினர். சென்னை அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் தன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. ஆட்டநாயகனாக சென்னை அணி கேப்டன் தோனி தேர்வு செய்யப்பட்டார்.