உலகின் மிகவும் வெற்றிகரமான டி20 தொடர்களில் ஒன்றான இந்தியன் பிரீமியர் லீக், 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விளையாடும் அனைத்து வீரர்களும் சிறந்த பங்களிப்பால் தங்களது அணியை வெற்றி பெறச் செய்வர். அவற்றில், சில வீரர்கள் ஐபிஎல் ஏலங்களில் மிகக் குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் ஆகி தங்களது அணிக்கு நிறைவான பலனை அளித்துள்ளனர். அவற்றால் அவர்களது அணி பல்வேறு வெற்றிகளை குவித்து உள்ளது. அவ்வாறு குறைந்த தொகையில் அதிக பலனை ஈட்டிய மூன்று சிறந்த வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.லுங்கி இங்கிடி:
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற "ஆப்பிரிக்கன் கோப்பை" தொடரில் இரண்டாவது அதிக விக்கெட் கைப்பற்றிய பெருமையை பெற்றதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வெளிச்சத்திற்கு வந்தார், லுங்கி. உள்ளூர் போட்டியில் நடைபெற்ற ஆட்டங்களில் தொடர்ச்சியான பங்களிப்பின் காரணமாக தென்னாப்பிரிக்க டி20 அணியில் இடம் பிடித்தார். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாகிய இவர், தனது முதலாவது தொடரிலே "ஆட்டநாயகன்" விருதையும் தட்டிச் சென்றார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக 50 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் ஆனார். ஏலத்தில் குறைந்த தொகையில் எடுக்கப்பட்டாலும் தனது அணிக்கு இவர் அளித்த பங்களிப்பு ஏராளம். கடந்த ஆண்டில் மொத்தம் 7 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்களை கைப்பற்றினார். மேலும், இவரது பௌலிங் எகனாமி 6-க்கு மிகாமல் இருந்தது. இவரது அபார பங்களிப்பால் சென்னை அணி தனது மூன்றாவது ஐபிஎல் கோப்பையை வெல்ல பெரிதும் உதவியது.
#2.ராகுல் திரிபாதி:
ரஞ்சி டிராபியில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் திரிபாதி, தனது அசுரத்தனமான கிரிக்கெட் திறமைகளுக்கு பெயர் போனவர். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக வெறும் பத்து லட்சத்திற்கு மட்டுமே ஒப்பந்தம் ஆனார். அந்த பத்தாவது ஐபிஎல் சீசனில் தொடக்க வீரராக பேட்டிங்கில் அசத்தினார். 14 போட்டிகளில் களமிறங்கி 391 ரன்களை குவித்தார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 146.44 என்ற வகையில் இருந்தது. 2017-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 52 பந்துகளில் 93 ரன்களை குவித்ததே இவரது சிறந்த ஆட்டமாக தற்போது வரை உள்ளது.
#1.நித்திஷ் ரானா :
தற்போதைய காலகட்டத்தில் ஒரு சிறந்த டி20 பேட்ஸ்மேனாக உருவெடுத்து வருகிறார், நித்திஷ் ரானா. சில சமயங்களில் ஆஃப் பிரேக் எனப்படும் பந்துவீச்சிலும் ஒரு கலக்கு கலக்குகிறார். 2015-இல் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபியின் 8 இன்னிங்சில் பங்கேற்று 299 ரன்களை குவித்துள்ளார். அந்த தொடரில் இவரது சராசரி 42.71 ஆகும். மேலும், அதே தொடரில் 21 சிக்சர்களை வெளுத்து வாங்கி தொடரின் அதிகபட்ச சிக்சர்களை அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். இதனால், அதே ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 10 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் ஆனார். ஆனால், அந்த தொடரில் இவருக்கு களமிறங்க வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. இருப்பினும், அடுத்த இரு சீசன்களில் அதே அணியில் தங்கவைக்கப்பட்டார்.
2017ம் ஆண்டில் நான்கு போட்டிகளில் களமிறங்கி 104 ரன்கள் குவித்தார். மேலும், அந்த தொடரில் 36 பந்துகளில் 70 ரன்களை குவித்தது இவரது சிறந்த ஆட்டமாகவும் அமைந்தது. பின்னர், 2017ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் முதலாவது ஆட்டத்தில் இருந்து அணியின் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். 13 போட்டிகளில் விளையாடி 333 ரன்களை 30.27 என்ற சராசரியுடன் குவித்தார்.