இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை தொடர் தொடங்க இன்னும் 44 நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணியினரும் தங்களது வியூகத்தை தீட்டி வருகின்றனர். உலகின் மிகப்பெரிய தொடரான உலக கோப்பை தொடர் வரும் மே மாதம் 30 ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆனால்,இதற்கு முன்னே ஒவ்வொரு சர்வதேச அணியினரும் தங்களது முன்னேற்பாடுகளை தொடங்க உள்ளனர். இதற்காக பல்வேறு ஐபிஎல் அணிகளில் விளையாடி வரும் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடர் முடியும் முன்பே தங்களது சொந்த நாட்டு அணியுடன் இணைய உள்ளனர். இதனால், சில ஐபிஎல் அணிகளின் வீரர்கள் இல்லாமல் பாதிப்புக்கு உள்ளாக உள்ளனர். அவ்வாறு வீரர்களின் பற்றாக்குறையால் திண்டாட உள்ள மூன்று ஐபிஎல் அணிகளை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
இந்த ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ள அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்த அணி விளையாடியுள்ள 8 போட்டிகளில் வெறும் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. ஏறக்குறைய தங்களது ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து திணறி வருகிறது, பெங்களூரு அணி. இன்னும் மீதமிருக்கும் போட்டிகளில் வென்றால் மட்டுமே ஓரளவுக்கு ரசிகர்களின் மதிப்பை இந்த அணி பெற முடியும். மார்கஸ் ஸ்டோனிஸ், மொயின் அலி, கிராண்ட்ஹோம், ஹெட்மயர் மற்றும் டிம் சவுதி போன்ற வெளிநாட்டு வீரர்கள் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியிலிருந்து இந்த ஐபிஎல் தொடர் முடிவதற்கு முன்பே தங்களது தாய் நாட்டிற்கு செல்ல உள்ளனர். இதுமட்டுமல்லாது, அணியின் கேப்டனான விராட் கோலிக்கும் தொடரின் இறுதி ஆட்டங்களில் சற்று ஓய்வு அளிக்கப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
#2.மும்பை இந்தியன்ஸ்:
இந்த 2019 ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாம் இடம் வகிக்கிறது. இந்த அணியில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்களான குயின்டன் டி காக், பெகன்ட்ராஃப், மலிங்கா போன்றோர் சில இறுதி ஆட்டங்களில் இருந்து வெளியேறி தங்களது சொந்த நாட்டு அணியில் இணைய உள்ளனர். மேலும், ஜஸ்ப்ரிட் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் தொடரின் இறுதி ஆட்டங்களில் இருந்து ஓய்வு அளிக்கப்படுவார்கள் என தெரிகிறது. நிச்சயம் பிளே ஆப் சுற்றில் இந்த வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என தெளிவாய் தெரிகிறது.
#3.சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
உலக கோப்பை தொடரால் கடுமையான பிரச்சினைக்கு உள்ளாகும் அணிகளில் ஒன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஏனெனில், இந்த அணியில் ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் சமீபகாலமாக தோல்வி அடைந்து வருகிறது. பேட்டிங்கின் முதுகெலும்பாகத் திகழும் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ மற்றும் கனே வில்லியம்சன் போன்ற பேட்ஸ்மேன்களும் ரஷீத் கான், முகமதுநபி, மார்டின் கப்டில் மற்றும் ஷகிப் அல்-ஹசன் போன்ற வீரர்களும் தங்களது சொந்த நாட்டு அணிக்காக ஐபிஎல் தொடரில் இருந்து திரும்ப உள்ளனர். இவர்களை நம்பித்தான் ஐதராபாத் அணியின் வெற்றி பெருமளவு உள்ளது. நிச்சயம் இவர்களை ஐதராபாத் அணி இழந்தால், வெற்றிகளை குவிப்பது சற்று கடினம்.