இந்திய பிரீமியர் லீக் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ், சூதாட்ட பிரச்சனையில் சிக்கி 2 ஆண்டுகள் தடைக்குள்ளானது. அதற்கு பின்னர், கடந்தாண்டு மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டத்தை வென்று எதிர்பார்க்க முடியாத திருப்பத்தை அளித்திருந்தது, சென்னை அணி. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், துரதிஸ்டவசமாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது.
கடந்த இரு ஆண்டுகளாக சிறப்பான சாதனையை செய்து வரும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்று உள்ளது. எனவே, அடுத்த ஆண்டிலாவது நிச்சயம் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், அதற்கு முன்னர் அணியில் சில மாற்றங்களை செய்திருக்க வேண்டும். பெரும்பாலும் அணி வீரர்களை ஏல முறையில் தேர்ந்தெடுக்கும் முறை கையால்பட்டு வருகிறது. ஆனால், இப்பொழுது அதற்கு முன்பாக அணி மாற்றம் எனும் புதிய வடிவம் அரங்கேறி வருகிறது.
ஓரிரு வாரங்களுக்கு முன்னர் கூட மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் இருவர் அணி மாற்றம் செய்யப்பட்டதை நாம் அறிந்த ஒன்றே. மேலும், அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் சீசனில் அணிமாற்றம் செய்யப்பட்ட முதல் செயலாகவும் இது அமைந்தது. அதுபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சில வீரர்களை தமது அணியிலிருந்து விடுவித்து அவர்களுக்குப் பதிலாக மாற்று அணியிலிருந்து புதிதாக வீரர்களை இணைக்க முயற்சிக்கும். எனவே, அவ்வாறு ஏலம் நடைபெறும் முன்பாகவே சென்னை நிர்வாகம் அணிமாற்றம் மூலம் புதிதாக இணைக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
#3.ஈஷ் சோதி:
அடுத்த சீசனில் நிச்சயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு தரப்பில் சில பிரச்சினைகளை சந்திக்க கூடும். கடந்த சில ஆண்டுகளாக சென்னை அணியில் இடம்பெற்று வரும் மூத்த சுழற்பந்து வீச்சாளர்களான உலக கோப்பை தொடர் உடன் ஓய்வுபெற்ற இம்ரான் தாஹிர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் ஆர்வம் காட்டாத ஹர்பஜன் சிங் ஆகியோரை அணியில் தொடர்ந்து நீடிப்பது நல்ல காரியம் அல்ல. இவர்களுக்கு மாற்றாக ரவிந்திர ஜடேஜா, மிட்செல் சென்டர் ஆகியோரை சுழற்பந்து வீச்சை தரப்பில் எம்.எஸ்.தோனி அணியில் இணைப்பார்.. நிச்சயமாக ஆடும் லெவனில் ஜடேஜா இணைக்கப்பட்டிருந்தால் சாண்ட்னர் இடம் பெறுவது சற்று கடினம் தான்.
சமீப காலங்களில் தட்டுத் தடுமாறி வரும் கரண் சர்மா, அடுத்த ஆண்டு சென்னை அணியில் இருப்பதே சந்தேகம்தான். தற்போது சிறந்த ஒரு டி20 பவுலராக உருவெடுத்திருக்கும் ஈஷ் சோதி ஆட்டத்தின் தொடக்கம் மற்றும் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி வந்துள்ளார். ஓரளவுக்கு அனுபவம் கொண்டுள்ள இவர், இம்ரான் டாஹிருக்கு மிகச்சிறந்த மாற்றாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ராஜஸ்தான் அணியில் ஏற்கனவே ஸ்ரேயாஸ் கோபால் போன்ற லெக் ஸ்பின்னர் உள்ளமையால் சோதியை விடுவிக்கப்படுவதற்கு போதிய காரணங்கள் உள்ளன. அவ்வாறு நிகழ்ந்தால், சென்னை அணி இவரைத் தன் முதல் ஆளாக குறிவைக்கும்.
#2.காலின் முன்றோ:
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போலவே அடுத்த சீசனிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிரதான தொடக்க பேட்ஸ்மேனாக ஷிகர் தவான் மற்றும் ப்ரித்வி ஷா உள்ளார்கள். இதன் காரணமாக, ஜாசன் ராய் அல்லது காலில் முன்றோ ஆகியோரில் ஏதேனும் ஒரு வெளிநாட்டு வீரர் நிச்சயம் அணியில் இருந்து நீக்கப்படுவார். 2019 உலகக்கோப்பை தொடரில் அற்புதமாக விளையாடிய ஜேசன் ராய் அணியில் நீடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, அவரை மாற்று வீரராக கருத்திற்கொண்டு காலின் முன்றோவை வெளியேற்றலாம்.
மறுபக்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆண்டு மிகச் சிறந்த பேட்டிங் வரிசையை கொண்டுள்ள அணியாக உருவெடுக்க வேண்டும். கடந்த சீசனில் தொடர் முழுவதும் தடுமாறிய வாட்சன் பிளே ஆப் சுற்றில் மட்டுமே சிறப்பாக விளையாடி உள்ளார். எனவே ஃபாப் டூபிளெசிஸ் உடன் களமிறங்கும் ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரர் சென்னை அணிக்கு தேவைப்படுகிறார். அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாகத் திகழ்ந்த சாம் பில்லிங்ஸ் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோரும் கடந்த சீசனில் போதிய பார்மின்றி தவித்ததால் தங்களது இடத்தை தற்போது இழந்துள்ளனர். கேதர் ஜாதவிற்கும் இதே நிலை தான் தொடர்கிறது. அணியில் பிரதான பேட்ஸ்மேனாக தோனி மட்டுமே இருப்பார் என்ற நிலைபாடு உள்ளது.
எனவே, அதிரடி தொடக்க ஆட்டக்காரர் முன்றோவை தமது அணியில் இணைத்து சில ஓவர்களில் பேட்டிங் செய்ய வைத்து வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுக்க சென்னை அணி நிர்வாகம் முற்படலாம். ஏற்கனவே, கடந்த சீசனின் பவர் பிளே ஓவர்களில் மிகக்குறைந்த ரன்ரேட்டை கொண்டுள்ள அணிகளில் முதன்மை வகித்த சென்னை அணி, இம்முறையாவது பவர் பிளே ரன்ரேட்டை உயர்த்தும் நோக்கத்தில் இவரை முன்னணி பேட்ஸ்மேனாக களமிறக்க வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டுமே ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்களில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் சிரமமின்றி ரன்களை குவிக்க ஏதுவாக அமையும்.
#1.ஹனுமன் விஹாரி:
இந்திய டெஸ்ட் அணியில் நிலையான இடத்தை பிடித்திருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த ஹனுமன் விகாரி, தாம் இணைந்த எந்த ஒரு அணியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாடும் இவர், குறுகிய கால போட்டிகளிலும் தம்மை மெருகேற்றி உள்ளார். இவர் கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேவையான உள்நாட்டு பேட்ஸ்மேனாக இவர் இடம் பிடிப்பதற்கு போதிய வாய்ப்புகள் உள்ளன.
கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் அம்பத்தி ராயுடு மற்றும் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்திருக்கும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு மாற்றாக இவர் அமையலாம். டிஎன்பிஎல் போட்டிகளில் சிறப்பாக ஜொலிக்கும் முரளிவிஜய், ஐபிஎல் போட்டிகளில் தமக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை தொடர்ந்து வீணடித்து வருகிறார். ரவீந்திர ஜடேஜாவும் தொடர்ச்சியாக லோவர் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே கருதப்பட்டு வருகிறார். இதன் காரணமாக, ஆட்டத்தில் நங்கூரம் போல் நிலைத்து ரன்களை குவிக்கும் திறன் படைத்த ஹனுமன் விகாரையை அணி நிர்வாகம் தேர்வு செய்யலாம்.
பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் ஓரளவுக்கு சிறப்பாக செயல்படவுள்ள ஹனுமன் விகாரியை மிடில் ஓவர்களில் பந்து வீசவும் அனுமதிக்கலாம். அதுமட்டுமல்லாமல் மகேந்திர சிங் தோனிக்கு பக்கபலமாக ஒரு பிரதான வலக்கை பேட்ஸ்மேனாகவும் இவர் திகழ்வதற்கு வாய்ப்புள்ளன. 25 வயது மட்டுமே இவருக்கு ஆகியுள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவருக்கான எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.