#1.ஹனுமன் விஹாரி:

இந்திய டெஸ்ட் அணியில் நிலையான இடத்தை பிடித்திருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த ஹனுமன் விகாரி, தாம் இணைந்த எந்த ஒரு அணியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாடும் இவர், குறுகிய கால போட்டிகளிலும் தம்மை மெருகேற்றி உள்ளார். இவர் கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேவையான உள்நாட்டு பேட்ஸ்மேனாக இவர் இடம் பிடிப்பதற்கு போதிய வாய்ப்புகள் உள்ளன.
கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் அம்பத்தி ராயுடு மற்றும் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்திருக்கும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு மாற்றாக இவர் அமையலாம். டிஎன்பிஎல் போட்டிகளில் சிறப்பாக ஜொலிக்கும் முரளிவிஜய், ஐபிஎல் போட்டிகளில் தமக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை தொடர்ந்து வீணடித்து வருகிறார். ரவீந்திர ஜடேஜாவும் தொடர்ச்சியாக லோவர் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே கருதப்பட்டு வருகிறார். இதன் காரணமாக, ஆட்டத்தில் நங்கூரம் போல் நிலைத்து ரன்களை குவிக்கும் திறன் படைத்த ஹனுமன் விகாரையை அணி நிர்வாகம் தேர்வு செய்யலாம்.
பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் ஓரளவுக்கு சிறப்பாக செயல்படவுள்ள ஹனுமன் விகாரியை மிடில் ஓவர்களில் பந்து வீசவும் அனுமதிக்கலாம். அதுமட்டுமல்லாமல் மகேந்திர சிங் தோனிக்கு பக்கபலமாக ஒரு பிரதான வலக்கை பேட்ஸ்மேனாகவும் இவர் திகழ்வதற்கு வாய்ப்புள்ளன. 25 வயது மட்டுமே இவருக்கு ஆகியுள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவருக்கான எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.