இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி மூன்று நாட்கள் நிறைவடைந்த நிலையில் பல சுவாரசியங்கள் அரங்கேறியுள்ளன. குறிப்பாக, நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பட்லரை ரன் அவுட் செய்தது சர்ச்சைக்குள்ளானது. இதுபோன்ற சர்ச்சை விஷயங்களும் பூரிப்படையும் நிகழ்வுகளும் அவ்வப்போது ஐபிஎல் தொடரால் வெளிக்கொணரப்பட்டு வருகின்றன. அதில் உள்ளூர் போட்டிகளில் நன்கு ஜொலிக்கும் இளம் வீரர்கள் உலக கிரிக்கெட்டில் தடம் பதிக்க ஒரு அச்சாரமாகவும் இந்தியன் பிரீமியர் லீக் திகழ்கிறது.
பாண்டியா சகோதரர்கள், குல்தீப்-சாகல் இணை போன்ற ஒப்பற்ற வீரர்களை ஐபிஎல் உருவாக்கிய தரமான சான்றுகளாகும். அவ்வாறு இவ்வருட ஐபிஎல் தொடரில் கலக்கப்போகும் 19 வயதுக்குட்பட்ட இளம் வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காண்போம்
#3.பிரப்சிம்ரன் சிங்:
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையின் இந்திய வளர்ந்துவரும் அணியில் இடம் பெற்றவர், பிரப்சிம்ரன் சிங். இதுபோன்ற காரணங்களால் இம்முறை ஐபிஎல் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பஞ்சாப் அணி நிர்வாகம் பாட்டியாலாவைச் சேர்ந்த 17 வயதான இவரை 4.8 கோடி ரூபாய்க்கு எடுத்தது. மொத்தம் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 92 ரன்கள் குவித்துள்ளார். மேலும், இவரது ஸ்ட்ரைக் ரேட் 190 என்ற வகையில் அமைந்துள்ளது. இவரின் வாணவேடிக்கையை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
அதிகமான தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டதன் காரணமாக இவருக்கு நெருக்கடிகள் அளிக்கப்பட்டாலும் தனது இயல்பான ஆட்டத்தை இந்த ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கலாம். ஏற்கனவே, அணியில் இந்தியாவின் கே.எல்.ராகுல் வெஸ்ட் இண்டீசின் நிக்கோலஸ் போன்ற திறமையான விக்கெட் கீப்பர்கள் உள்ளபோதிலும் இவருக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருப்பினும், தனது அட்டகாசமான பங்களிப்பை அணிக்கு அளிப்பார்
#2.சந்திப் லேமிச்சனே:
நேபாள நாட்டைச் சேர்ந்த மாயஜால சுழல்பந்து வித்தைக்காரரான லேமிச்சனே கடந்த ஆண்டு முதல் டெல்லி அணிக்காக இடம் பெற்று வருகிறார். கடந்த ஓராண்டு காலமாக உலகம் முழுவதும் உள்ள டி20 தொடர்களில் எப்படியாவது இடம் பெற்று தனது திறனை நிரூபித்து வருகிறார். ஆனால், கடந்த சீசனில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே இவருக்கு அணியில் களம்காண வாய்ப்பளிக்கப்பட்டது.
அந்த மூன்று போட்டிகளில் பந்துவீசி தனது எக்கனாமியை 7-க்கு மிகாமல் பந்து வீசி 5 விக்கெட்களையும் கைப்பற்றி தான் சளைத்தவன் அல்ல என்பதை நிரூபித்தார். ஏற்கனவே அணியில் அமித் மிஸ்ரா, ராகுல் மற்றும் அக்சர் பட்டேல் போன்ற அற்புதமான சுழல் பந்துவீச்சாளர்கள் உள்ள நிலையிலும் இந்த 18 வயதான இளம் வீரரின் பங்கு எடுபடும் என எதிர்பார்க்கலாம்.
#1.முஜீப் ரஹ்மான்:
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்று எவரும் எதிர்பார்த்திராத வகையில் ஒரு அற்புத தொடரை அளித்தார். கடந்த சீசனில் இந்த ஆப்கானிஸ்தான் இளம்புயல் முஜீப் ரஹ்மான் நான்கு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் ஒப்பந்தமாகி, 11 போட்டிகளில் இடம்பெற்று 14 விக்கெட்களை கைப்பற்றினார். மேலும், இவரது பௌலிங் எக்கனாமி 7 க்கு மிகாமல் இருந்தது அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்தது.
ஐபிஎல் மட்டுமல்லாது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக்பாஸ் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியிலும் வங்கதேச பிரீமியர் லீக்கிலும் கற்ற அனுபவங்களை இந்த சீசனில் வெளிப்படுத்துவார். கடந்த ஆண்டு எதிரணி பேட்ஸ்மேன்களை அஸ்வின் - ரகுமான் இணை கலங்கடித்ததைப்போல இந்த ஆண்டிலும் தொடர்வார்கள் என எதிர்பார்க்கலாம்.