பொதுவாக ஐபிஎல் தொடர் என்றாலே அதிரடிக்கு பஞ்சம் இருக்காது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் விளையாடும் ஒவ்வொரு அணியிலும் அதிரடி வீரர்கள் இடம்பெற்றிருப்பார்கள். அவர்கள் தான் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்கள். இவ்வாறு ஐபிஎல் தொடரில் இறுதி வரை அதிரடியாய் சென்ற போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் ( 469 ரன்கள் )
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 32 ஆவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய் மற்றும் ஹைடன் களமிறங்கினர். இரண்டு பேட்ஸ்மேன்களும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். அதிரடியாக ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை விளாசிய ஹைடன், 34 ரன்களில் அவுட்டானார்.
அதன் பின்பு வந்த சுரேஷ் ரெய்னா 13 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். நீண்ட நேரம் அதிரடியாக விளையாடிய முரளி விஜய் 56 பந்துகளில் 127 ரன்களையும், 11 சிக்சர்களையும், 8 பவுண்டரிகளையும் விளாசினார். இவருடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய அல்பி மோர்கல் 34 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார். இதில் 5 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் குவித்தது.
247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. நமன் ஓஜா மற்றும் மைக்கேல் லம்ப் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய நமன் ஓஜா 55 பந்துகளில் 94 ரன்களை விளாசினார். இதில் 8 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். அதன் பின்பு வந்த ஷேன் வாட்சனும் அதிரடியாக விளையாடினார்.
இவர் 25 பந்துகளில் 60 ரன்களையும், 5 சிக்சர்களையும், 5 பவுண்டரிகளையும் விளாசினார். போட்டியின் இக்கட்டான சூழ்நிலையில் வாட்சனும் அவுட்டாகி வெளியேறினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 223 ரன்கள் மட்டுமே அடித்தது. எனவே சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்து, 469 ரன்கள் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#2) கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ( 459 ரன்கள் )
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரும் களம் இறங்கினர். பவர் பிளே ஓவர்களில் சுனில் நரைன் வெளுத்து வாங்கினார். சுனில் நரைன் 36 பந்துகளில் 75 ரன்களையும், 4 சிக்சர்களையும், 9 பவுண்டரிகளையும் விளாசினார். இறுதியில் வந்து அதிரடி காட்டிய கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், வெறும் 23 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது.
246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. முதல் ஓவரில் இருந்தே, ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகிய இருவரும் தங்களது அதிரடியை ஆரம்பித்தனர். கிரிஸ் கெயில் 21 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதிரடியாக விளையாடிய ராகுல் 29 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். போட்டி இக்கட்டான சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கும் போது, வந்த பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், 22 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார்.
பின்பு அஸ்வினும் அவுட்டாகி வெளியேறினார். 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 214 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே கொல்கத்தா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்து 459 ரன்கள் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.