இந்த ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டெல்லி அணி, 11 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வென்றால் டெல்லி அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும். இந்நிலையில் மீதமுள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் ஆவது வெற்றி பெற முயற்சிப்போம் என டெல்லி அணியின் கேப்டன் சிரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
போட்டி 46, டெல்லி கேப்பிடல்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
இன்று டெல்லி, பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடக்கவிருக்கும் போட்டியில் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. தொடக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பெங்களூரு அணி தற்பொழுது 11 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆதலால், கோலி அணியை டெல்லி அணி குறைத்து மதிப்பிடக் கூடாது. ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள, பெங்களூரு அணி மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயரின் கருத்து:
நேற்று நடந்த பேட்டியில் டெல்லி அணியின் கேப்டன் சிரேயாஸ் ஐயர் கூறுகையில்:
”எங்களது பணி பாதிதான் நிறைவேறி உள்ளது. மீதமுள்ள போட்டிகளில் ஒன்றில் நாங்கள் வெற்றி பெற வேண்டும். எனினும் எங்களது நோக்கம் மீதமுள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் ஆவது வெற்றி பெற வேண்டும் என்பதே. தற்பொழுது எங்களது அணி, நேர்மறையான மனநிலையில் உள்ளது, பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவோம் என நாங்கள் நம்புகிறோம்”.
ஆடுகளம் பற்றி கூறியது:
”சொந்த மண்ணில் விளையாடுவது எங்களுக்கு சாதகமாக அமையும். எங்களது அடுத்த போட்டி சென்னை மண்ணில் நடக்க உள்ளது, சென்னை ஆடுகளமும் ஏறத்தாழ இதே தன்மையை உடையது, ஆதலால் எங்களுக்கு இந்த சூழ்நிலையில் பயனுள்ளதாக இருக்கும்".
மேலும் அவர் கூறுகையில்,"பல வெளிநாட்டு வீரர்கள் உலகக் கோப்பைக்கு பயிற்சியில் ஈடுபடுவதற்கு நாடு திரும்ப உள்ளனர். இதுபோன்ற ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடக் கூடிய பெங்களூரு அணியின் மோயின் அலி, இங்கிலாந்திற்கு திரும்பியுள்ளதால் எங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது, அதை நாங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்வோம். வேகப்பந்து வீச்சாளர் ரபாடா , நாடு திரும்புவாரா இல்லையா என்பதுபற்றி இன்னும் தெரியவரவில்லை. பெங்களூர் அணிக்கு இது வாழ்வா சாவா போட்டி, ஆனால் நாங்களும் மீதமுள்ள போட்டியை வாழ்வா சாவா போட்டியாகவே கருதி விளையாடுவோம். அனைத்தும் எங்களுக்கு நன்மையாக அமையும் என நம்புகிறோம்".
இவ்வாறு டெல்லி அணியின் கேப்டன் சிரேயாஸ் ஐயர் கூறினார். டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் போட்டி மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது.