2019 ஐபிஎல் தொடர் தொடங்கிய மூன்றாவது நாளே சர்ச்சைகள் எழத் தொடங்கியிருக்கிறது. நேற்று நடைபெற்ற ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ மற்றும் ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’ அணிகளுக்கு இடையேயான போட்டியில் ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’ அணியின் அபாயகரமான பேட்ஸ்மன் ‘ஜோஸ் பட்லரை’ பஞ்சாப் அணியின் கேப்டனான ‘அஸ்வின்’ ஆட்டமிழக்கச் செய்த விதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முன்னதாக ‘கிறிஸ் கெய்ல்’ அடித்த அற்புதமான 79 ரன்கள் துணையுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 184 ரன்கள் குவித்தது. இந்த கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ‘ஜோஸ் பட்லர்’ சிறப்பான தொடக்கத்தை தந்தார். பஞ்சாப் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் பஞ்சராக்கிய பட்லர் 29 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.
பட்லரை அவுட்டாக்க முடியாமல் தவித்த பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் புதுமையான ஒரு உத்தியைக் கையாண்டார். ஆட்டத்தின் 13-வது ஓவரை அஸ்வின் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை அஸ்வின் வீச வரும் பொழுது, பந்தை வீசாமல் எதிர்முனையில் இருந்த ஸ்டெம்பை தகர்த்து ‘மன்கட்’ முறையில் பட்லரை ஆட்டமிழக்கச் செய்தார். அந்த நேரத்தில் எதிர்முனையில் நின்றிருந்த பேட்ஸ்மேனான ‘ஜோஸ் பட்லர்’ கிரீசுக்கு வெளியே இருந்தார்.
கள நடுவர் இதனை உடனே மூன்றாவது நடுவரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அப்பொழுது அஸ்வின், பட்லர் இடையே களத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. மூன்றாவது நடுவர் ‘அவுட்’ வழங்க பட்லர் கோபத்துடன் வெளியேறினார். ஐசிசி விதிகளின்படி இது சரிதான் என்றாலும், அஸ்வின் முன்னதாக ஒரு எச்சரிக்கை வழங்கி இருக்கலாம் என்பதே பலரது கருத்தாக உள்ளது.
இது போன்ற செயல்கள் ‘ஜென்டில்மேன் விளையாட்டு’ என சொல்லப்படும் கிரிக்கெட்டுக்கு அழகல்ல என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த சர்ச்சை குறித்து போட்டி முடிந்த பின் அஸ்வின் கூறுகையில், “என்னை பொறுத்தவரையில் நான் செய்ததில் எந்தவித தவறும் இல்லை. கிரிக்கெட் விதிமுறைப்படி தான் நான் அவரை ஆட்டமிழக்க செய்தேன்”. என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "கிரிக்கெட்டில் இது போன்ற சில சம்பவங்கள் தான் ஆட்டத்தை மாற்றக் கூடியதாக அமையும். நான் ‘மன்கட்’ முறையில் பட்லரை ஆட்டமிழக்க செய்ததில் ‘ஐசிசி’ விதிமுறைப்படி ஏதேனும் தவறு இருந்தால் கூறுங்கள். விதிகளின்படி நான் சரியாகச் செயல்பட்ட இந்த இடத்தில் ‘கிரிக்கெட் ஸ்பிரிட்’ என்ற வாதத்திற்கே இடமில்லை”.
“என்னைப் பொறுத்தவரை நான் செய்ததில் எந்தவித தவறும் இல்லை. இது போன்ற நேரங்களில் பேட்ஸ்மேன்கள் தான் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். விதிகள் எல்லோருக்கும் பொதுவான ஒன்று. அந்த நேரத்தில் அந்த இடத்தில் நான் பேட்டிங் செய்து கொண்டிருந்தாலும் ஐசிசி விதிகள் ஒன்றுதான்”. இவ்வாறு அஸ்வின் கூறினார்.
முன்னதாக பட்லரின் துணையோடு இலக்கை அபாரமாக துரத்திக் கொண்டிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பட்லர் ஆட்டமிழந்த பிறகு ஒரேயடியாக தடம் புரண்டது. 108/1 என இருந்த ராஜஸ்தான், பின்னர் 170/9 என ஆகி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அஸ்வினின் இந்த செயல்தான் பஞ்சாப் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.