இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 4 டெஸ்ட், 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என டிரா ஆனது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு டெஸ்ட்டில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்றுள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்ன்-னில் இந்திய நேரப்படி அதிகாலை 5:00 மணிக்குத் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளுமே தங்களது ஆடும் XIஐ நேற்று (டிசம்பர் 25) அறிவித்திருந்தது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய தொடக்கவீரர்களான முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்ததால் அவர்களுக்கு பதிலாக மயான்க் அகர்வால் மற்றும் ஹனுமா விகாரி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இருவரும் மிகவும் நிதானமாக விளையாட ஆரம்பித்தனர்.
மயான்க் அகர்வால் இடையிடையே பவுண்டரிகளை விளாசி தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வந்தனர். மிகவும் பொறுமையாக விளையாடிய ஹனுமா விகாரி பேட் கமின்ஸ் வீசிய பந்தில் , ஆரோன் ஃபின்ச்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 66 பந்துகளை எதிர்கொண்டு 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2010ற்குப் பிறகு அந்நிய மண்ணில் 19 ஓவர் வரை நின்ற தொடக்க ஆட்டக்காரர்கள் என்ற பெருமையை மயன்க் அகர்வால் மற்றும் ஹனுமா விகாரி பெற்றனர்.
இந்திய அணி உணவு இடைவேளையில் 1 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களை அடித்திருந்தது. பின்னர் களமிறங்கிய புஜாரா , மயான்க் அகர்வால்-வுடன் கைகோர்த்து விளையாட ஆரம்பித்தார். 36 வது ஓவரில் மயான்க் அகர்வால் தனது முதல் சர்வதேச டெஸ்ட் அரை சதத்தை விளாசினார்.
54வது ஓவரில் பேட் கமின்ஸ் வீசிய பந்தில் மயான்க் அகர்வால் டிம் பெய்ன்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 161 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 75 ரன்களை அடித்தார். அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். புஜாரா மற்றும் மயான்க் அகர்வால் பார்ட்னர் ஷிப்பில் 83 ரன்கள் இந்திய அணிக்கு வந்தது. தேநீர் இடைவேளையில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை அடித்திருந்தது.
அதன்பின் களமிறங்கிய இந்திய கேப்டன் விராட் கோலி புஜாரா-வுடன் சேர்ந்து அணியின் ரன்களை உயர்த்த ஆரம்பித்தார். கோலி மற்றும் புஜாரா ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 70வது ஓவரில் புஜாரா தனது 21வது சர்வதேச டெஸ்ட் அரை சதத்தை அடித்தார்.
முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 89 ஓவர்களை எதிர்கொண்டு 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் அடித்திருந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் பேட் கமின்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புஜாரா 68 ரன்களுடனும் விராட் கோலி 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.