ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று மெல்போர்னில் தொடங்கியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 89 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களை எடுத்திருந்தது.
இரண்டாம் நாளான இன்று புஜாரா (68) மற்றும் விராட் கோலி (47) களமிறங்கினர். இன்று வீசப்பட்ட முதல் ஓவரிலேயே விராட் கோலி தனது 20வது சர்வதேச டெஸ்ட் அரைசதத்தை விளாசினார். 111வது ஓவரில் லயான் வீசிய பந்தில் பவுண்டரி விளாசி புஜாரா தனது 17வது சர்வதேச டெஸ்ட் சதத்தினை அடித்தார். பாக்ஸிங் டே டெஸ்ட்டில் மெல்போர்ன் ஆடுகளத்தில் சதமடித்த 5வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் புஜாரா.
இந்த டெஸ்ட்டில்தான் புஜார சதமடிக்க அதிக பந்துகளை (280 பந்துகள் ) எடுத்துக் கொண்டார். அத்துடன் ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் சதமடிக்க அதிக பந்துகளை எதிர்கொண்ட மூன்றாவது இந்திய வீரர் புஜாரா. விராட் கோலி 68 ரன்களை அடித்திருந்த போது ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் அதிக ரன்களை (1237 ரன்கள் ) விளாசிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். 1809 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
இந்திய அணி உணவு இடைவேளையில் 2 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் அடித்திருந்தது. இந்த செஸனில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் இந்திய அணிக்கு வந்தது.
விராட் கோலி இதுவரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 1573 டெஸ்ட் ரன்களை குவித்துள்ளார். இதுவே டெஸ்ட்டில் ஒரு அணியுடன் குவித்த அதிக ரன்களாகும். 123வது ஓவரில் ஸ்டார்க் வீசிய பந்தில் விராட் கோலி மேல்நோக்கி அடிக்க முற்பட்ட போது ஆரோன் ஃபின்ச்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 204 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகளுடன் 82 ரன்களை அடித்தார்.
புஜாரா மற்றும் கோலியின் பார்ட்னர் ஷிப்பில் இந்திய அணிக்கு 173 ரன்கள் வந்தது. அந்நிய மண்ணில் வருடத்தில் அதிக ரன்களை (1138) குவித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் விராட் கோலி. இதற்கு முன் ராகுல் டிராவிட் 1137 ரன்களை 2002ல் அடித்திருந்தார்.
125வது ஓவரில் பேட் கமின்ஸ் வீசிய பந்தில் புஜாரா போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 319 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகளுடன் 106 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய ரகானே மற்றும் ரோகித் சர்மா சற்று அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர்.
இந்திய அணி தேநீர் இடைவேளையில் 4 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்களை அடித்திருந்து. இந்த செஷனில் 2 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் இந்திய அணிக்கு வந்தது. பின்னர் நிதானமாக விளையாடிய ரகானே, லயான் வீசிய பந்தில் எல்.பி.டபுள்யு ஆனார். இவர் மொத்தமாக 76 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 34 ரன்களை அடித்தார். ரகானே மற்றும் ரோகித் சர்மா பார்ட்னர் ஷிப்பில் 63 ரன்கள் இந்திய அணிக்கு வந்தது
நாதன் லயான் , ராகனேவின் விக்கெட்டை 9 முறை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய பௌலரிடம் அதிக முறை தனது விக்கெட்டை ஒரே வீரரிடம் பறிகொடுத்த முதல் இந்தியர் ரகானே.
அதன்பின் களமிறங்கிய ரிஷப் ஃபன்ட் , ரோகித் சர்மா-வுடன் கைகோர்த்து விளையாட ஆரம்பித்தார். 163வது ஓவரில் தனது 10வது சர்வதேச டெஸ்ட் அரை சதத்தை விளாசினார் ரோகித் சர்மா. அத்துடன் ரிஷப் ஃபன்ட் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரினால் 50 ரன்கள் பார்ட்னர் ஷிப்-பும் வந்தது. அந்நிய மண்ணில் இரு வெவ்வேறு வீரர்களுடன் முதல் முறையாக 50 ரன்கள் பார்ட்னர் ஷிப்பை ரோகித் சர்மா செய்துள்ளார் என்ற பெருமையை பெற்றார்.
சற்று நிலைத்து ஆடிய ரிஷப் ஃபன்ட் ஸ்டார்க் வீசிய பந்தில் கவாஜா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 76 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 39 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய ஜடேஜா நிலைத்து ஆடாமல் ஹசில் வுட் வீசிய பந்தில் டிம் பெய்ன-டம் 4 ரன்கள் மட்டுமே அடித்து கேட்ச் ஆனார். இவரது விக்கெட்டுடன் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
இந்திய அணி முதல் இன்னிங்சில்169.4 ஓவர்களை எதிர்கொண்டு 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது. ரோகித் சர்மா 63 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் பேட் கமின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஸ்ட்ராக் 2 விக்கெட்டுகளையும் , நாதன் லயான் மற்றும் ஹசில்வுட் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்தரெலிய அணி மிகவும் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தியது. இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்களை எதிர்கொண்டு விக்கெட் இழப்பின்றி 8 ரன்களை அடித்தது. ஆரோன் ஃபின்ச் 3 ரன்களுடனும் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.