இந்த 2019 ஐபிஎல் தொடரில் நேற்றிரவு மும்பை ‘வான்கடே’ மைதானத்தில் நடைபெற்ற ‘மும்பை இந்தியன்ஸ்’ மற்றும் ‘டெல்லி கேப்பிடல்ஸ்’ அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி மும்பையை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வி மும்பை இந்தியன்ஸ் வீரர்களையும், ரசிகர்களையும் பெரிதாக பாதித்து இருக்காது. ஆனால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள் அனைவரையும் பெரிதாக பாதித்த ஒரு சம்பவம் நேற்று நிகழ்ந்தது. அதுதான் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ‘ஜஸ்பிரிட் பும்ரா’வின் காயம்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை சரமாரியாக விளாசி ரன்கள் சேர்த்தது. குறிப்பாக டெல்லி அணியின் ‘ரிஷாப் பான்ட்’ மும்பையின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் போட்டுத் தாக்கினார்.
இந்த இன்னிங்சின் கடைசி ஓவரை முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ‘ஜஸ்பிரிட் பும்ரா’ வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை பேட்ஸ்மேன் நேராக அடிக்க, அதைத் தடுக்க பும்ரா பாய்ந்த போது தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரின் நிலையை அறிய மும்பை அணியின் ‘பிசியோ’யும் அங்கு உடனே வந்தார்.
உலகக் கோப்பை நெருங்கி வருகின்ற இந்த நேரத்தில் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் காயம் அடைந்து இருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்றைய போட்டியில் ஜஸ்பிரிட் பும்ரா பேட்டிங் செய்ய வரவில்லை. இதனால் காயத்தின் தன்மை பெரிதாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. மேலும் இந்த உலக கோப்பை தொடரில் பும்ரா பங்கேற்பாரா என்ற அச்சமும் இந்திய ரசிகர்களிடையே நிலவுகிறது.
ஆனால் நம்பத்தகுந்த மும்பை வட்டாரங்கள் தெரிவிக்கையில், “இந்த காயத்தில் பயப்படும்படியாக ஒன்றுமில்லை. ஜஸ்பிரிட் பும்ரா நலமாகவே இருக்கிறார். இந்திய அணிக்கும், மும்பை அணிக்கும் மிகப்பெரிய சொத்தாகவே பும்ரா கருதப்படுகிறார். அதனால்தான் காயத்தின் தன்மையைப் மேலும் பெரிதாக்க வேண்டாம் எனக் கருதி அவரை பேட்டிங் செய்ய அனுப்பவில்லை” என கூறுகின்றனர்.
கடந்த வருடம் ஜூலை மாதம் நடந்த அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் கேட்ச் பிடிக்க முயன்று விரலில் காயம் அடைந்தார் பும்ரா. அந்தக் காயம் எலும்பு முறிவு வரை சென்றதால் பும்ராவால் அப்போது நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான ஒருநாள் போட்டித் தொடரிலும், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்க முடியாமல் போனது.
இந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய அணி கேப்டன் ‘விராட் கோலி’ அணி வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதாவது தேவையில்லாத அதிகப்படியான விஷயங்களை செய்யப்போய் காயத்தில் சிக்கி விடக்கூடாது என்பதே கோலியின் அறிவுரை. நடைபெற உள்ள உலக கோப்பையில் இந்திய கேப்டன் ‘விராட் கோலி’யின் முக்கிய அஸ்திரமாக கருதப்படுகிற பும்ரா காயமடைந்து இருப்பது நிச்சயம் கோலியின் நேற்றைய இரவு தூக்கத்தை பாதித்து இருக்கும்.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது அடுத்தப் போட்டியில் ‘பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்’ அணியை வருகிற 28-ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் மும்பை அணி ‘பும்ரா’வுக்கு ஓய்வு அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா காயத்திலிருந்து மீண்டு வந்து பந்துவீசினால் அது மும்பை ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒரு தருணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.