சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டனும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துணை கேப்டனுமான டேவிட் வார்னர், கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஓராண்டு தடைக்கு உள்ளானார். இருப்பினும், ஓராண்டு தடை முடிந்த பின்னர், 2019 ஐபிஎல் தொடரில் பங்கு கொண்டார். தொடரின் தனது இறுதி ஆட்டமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 56 பந்துகளை 81 ரன்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஓராண்டு தடைக்கு உள்ளான இவர், சிறப்பாக விளையாடுவாரா என பலரும் நினைத்த நிலையில் அனைவருக்கும் தனது பேட்டிங்கால் பதிலை அளித்தார், டேவிட் வார்னர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய இவர், ஒரு சதம், 8 அரைசதங்கள் உட்பட 692 ரன்களை குவித்து தொடரின் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். மேலும், இவரது ஸ்ட்ரைக் ரேட் 143 என்ற வகையில் அற்புதமாக உள்ளது. அணியில் இடம்பெற்ற மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜானி பேர்ஸ்டோ உடன் இணைந்து தனது சரவடி தாக்குதலை தொடர்ந்தார், டேவிட் வார்னர். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் முதன்முறையாக அபாரமாக விளையாடி 43 பந்துகளில் 89 ரன்கள் குவித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தினார், டேவிட் வார்னர். அணியில் அதிரடியை வெளுத்து வாங்கும் பேர்ஸ்டோ அவருக்கு இணையாக வார்னர் பொறுப்பாக விளையாடியும் அணியின் வெற்றிக்கு பங்காற்றினார்.
உண்மையில், இவர் விளையாடிய ஆட்டங்கள் அனைத்தும் ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடியதை போன்ற உணர்வுதான் அனைத்து ரசிகர்களுக்கும் தெரிந்தது. ஏனெனில், இம்மாதம் 30ஆம் தேதி நடைபெற உள்ள மிகப்பெரிய தொடரான உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ளார், டேவிட் வார்னர். 32 வயதான இந்த இடதுகை அதிரடி ஆட்டக்காரர், புத்துணர்வுடன் ஆஸ்திரேலிய அணியில் இணைய உள்ளார். ஐபிஎல்லில் விளையாடிய அனுபவம், இவரது திடமான மனநிலை, தொடர்ச்சியாக ரன்களை குவிக்கும் திறன் ஆகியவை ஆஸ்திரேலிய அணியின் உலக கோப்பை தொடருக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இம்முறையும் உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு பக்கபலமாக இவர் விளங்குவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தன்னால் முடிந்த சிறந்ததொரு பங்களிப்பை நடப்பு சீசனுக்கு மட்டுமல்லாமல் கடந்த சீசனுக்கும் சேர்த்து தாம் அளித்திருப்பதாக டேவிட் வார்னர், ஹைதராபாத் அணியில் இருந்து விலகிச் செல்லும்போது உருக்கமாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.