டெல்லியைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால சிறந்த நட்சத்திரமாகும். 2019 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இவர் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் அளித்ததாக கருதப்பட்டது. இந்திய உலகக் கோப்பை அணி அறிவித்த சில நாட்களுக்குப் பின் ரிஷப் பண்ட், அம்பாத்தி ராயுடு, நவ்தீப் சைனி, இஷாந்த் சர்மா, அக்ஸர் படேல் ஆகியோரை இந்திய உலகக் கோப்பை அணியின் காத்திருப்பு வீரர்களாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
ரிஷப் பண்ட் தனது இளம் வயதிலேயே பல்வேறு நாடுகளில் சென்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். 2016ல் வங்கதேசத்தில் நடந்த 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் தான் ரிஷப் பண்ட் உலக கிரிக்கெட்டில் அறிமுகமானார். நேபாள அணிக்கு எதிராக குறைந்த பந்தில் அரைசதம் அடித்து வரலாற்று சாதனை படைத்தார். அத்துடன் நமிபியா-விற்கு எதிராக சதம் விளாசி அரையிறுதிக்கு இந்திய அணியை அழைத்துச் சென்றார். 2017ஆம் ஆண்டில் இங்கிலாந்திற்கு எதிரான சர்வதேச டி20யில் ரிஷப் பண்ட் அறிமுகமானார். அதன்பின் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். மிகவும் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட், விருத்திமான் சாகாவிற்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பண்ட் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசியுள்ளார்.
எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான இந்திய தேர்வுக்குழு இந்திய உலகக் கோப்பை அணியில் ரிஷப் பண்ட்-ற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்ய காரணம், சிறந்த விக்கெட் கீப்பங் திறன் மற்றும் அனுபவ ஆட்டத்திறனே ஆகும். இதனை ரிஷப் பண்ட் கருத்தில் கொண்டு தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிறந்த பேட்டிங்கை வெளிபடுத்தியுள்ளார். இளம் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 2019 ஐபிஎல் சீசனில் 12 போட்டிகளில் பங்கேற்று 34.30 சராசரியுடன் 343 ரன்களை குவித்துள்ளார். இதில் 2 அரைசதங்கள் அடங்கும். மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக சில போட்டிகளில் வெற்றியை தேடித் தந்துள்ளார் ரிஷப் பண்ட். டெல்லி கேபிடல்ஸ் 2019 ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்றுள்ளது. முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுவது தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் நோக்கமாக உள்ளது.
இளம் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தனது கிரிக்கெட் கடவுளாக இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பார்ப்பதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை தான் விரும்பி விளையாட ஆரம்பிக்க காரணம் தோனி. அவரிடமிருந்து தான் தனது சர்வதேச தொப்பியை ரிஷப் பண்ட் வாங்கினார். மேலும் தோனியின் மீது உள்ள நம்பிக்கை மற்றும் அன்பை டிவிட்டரின் வாயிலாக ரிஷப் பண்ட் வெளிபடுத்தியுள்ளார்.
தோனி பற்றி ரிஷப் பண்ட் சமூக வலைத்தளங்களில் கூறியதாவது:
"நான் கிரிக்கெட்டை விரும்பி விளையாட காரணம் மகேந்திர சிங் தோனி. தற்போது என்னுடைய கிரிக்கெட் தெய்வத்துடனேயே சேர்ந்து விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளேன். என்னுடைய வாழ்நாள் கனவு நிறைவேறி விட்டது. அத்துடன் இது என்னுடைய மகிழ்ச்சியான தருணமாகும்.