விரைவில் வரவிருக்கும் உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னணி வீரர்கள் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி வருகின்றனர். இதனால் பல்வேறு அணிகளும் முன்னணி வீரர்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ‘பிளே-ஆஃப்’ சுற்றுக்கு முன்னேறி உள்ள ‘டெல்லி கேப்பிடல்ஸ்’ அணிக்கும் தற்போது மிகப்பெரிய ஒரு அடி விழுந்துள்ளது.
டெல்லி அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ‘காகிசோ ரபாடா’ காயம் காரணமாக தற்போது இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இதனால் ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’ அணிக்கு எதிரான டெல்லி அணியின் கடைசி லீக் ஆட்டத்திலும் மற்றும் பிளே-ஆஃப் சுற்று ஆட்டங்களிலும் ‘ரபாடா’வால் பங்கேற்க முடியாது. இது டெல்லி அணிக்கு மிகப்பெரிய ஒரு அடியாக அமைந்து உள்ளது.
கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்ற பெங்களூருக்கு எதிரான போட்டியில் ‘ரபாடா’வுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் கடந்த ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணிக்கு எதிரான போட்டியிலும் இவரால் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் டெல்லி அணி சார்பாக அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அந்த அறிக்கை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பப்பட்டது.
காயத்தின் தன்மை பெரிதாகாமல் இருக்கவும், வரப்போகும் உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ‘ரபாடா’வை உடனடியாக தாயகம் திரும்ப அழைப்பு விடுத்தது. இதனால் ரபாடா உடனடியாக தென்னாப்பிரிக்கா திரும்புகிறார்.
இது குறித்து ரபாடா அளித்துள்ள பேட்டியில், “இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை விட்டு விலகி நான் செல்வது எனக்கு உண்மையிலேயே மிகக் கடினமான ஒன்றாகும். அடுத்து நடைபெறப்போகும் உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு என் நாட்டின் (தென் ஆப்பிரிக்கா) சார்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி அணிக்காக இந்த ஐபிஎல் சீசன் எனக்கு களத்திலும், ஓய்வறையிலும் மிகச் சிறப்பாக இருந்தது. ‘டெல்லி கேப்பிடல்ஸ்’ அணி நிச்சயம் இந்த வருட ஐபிஎல் கோப்பையை வெல்லும் என நம்புகிறேன்”. இவ்வாறு ரபாடா கூறினார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு மிக முக்கிய காரணமாக விளங்கியவர் ரபாடா. இந்த சீசனில் 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். இவரது விலகல் டெல்லி அணிக்கு பிளே-ஆஃப் சுற்றில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தனது நாட்டின் முன்னணி வீரர்களை இந்த ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாட அனுமதித்திருந்தது. டெல்லி அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விட்டதால், ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘டுவைன் பிராவோ’வின் (32 விக்கெட்டுகள்) சாதனையை ரபாடா இந்த சீசனில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத இந்த காயம் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.
‘ரபாடா’வின் இந்த இழப்பையும் மீறி ‘டெல்லி கேப்பிடல்ஸ்’ அணி இந்த ஐபிஎல் தொடரில் சாதித்து கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.