இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பித்தபோது ‘டெல்லி கேப்பிடல்ஸ்’ அணி ‘ப்ளே ஆஃப்’ சுற்றுக்கு முன்னேறும் என்று யாரும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள். அணியின் பெயரை மட்டும் மாற்றினால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விட முடியுமா என்பதே ரசிகர்கள் பலரின் எண்ணமாக இருந்தது. ஆனால் தற்போது டெல்லி அணி அந்த எண்ணத்தை எல்லாம் தவிடுபொடியாக்கி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்திருக்கிறது.
‘ஸ்ரேயாஸ் அய்யர்’ என்ற இளம் வீரரின் கேப்டன்ஷிப்பில் இளமையான ஒரு அணியோடு இந்த ஐபிஎல் தொடரில் காலடி எடுத்து வைத்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் முன்னேற்றத்திற்கு பலர் காரணமாக அமைந்து இருந்தாலும் டெல்லி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ‘காகிசோ ரபாடா’.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இந்த 23 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் முதன்முதலாக கடந்த 2017-ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக ( டெல்லி டேர்டெவில்ஸ்) களம் கண்டார். ஆனால் அந்த தொடரில் 6 ஆட்டங்களில் பங்கேற்றவர் வெறும் 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.
2018-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் துரதிருஷ்டவசமாக கீழ் முதுகு பிரச்சனை காரணமாக ‘ரபாடா’வால் பங்கேற்க முடியாமல் போனது. ஆனால் கடந்த வருடத்துக்கும் சேர்த்து இந்த வருடத்தில் தனது மிகச்சிறப்பான பங்களிப்பை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக அளித்து வருகிறார் ரபாடா.
தனது அபார வேகத்தாலும், துல்லியமான பந்துவீச்சாலும் எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடித்து வருகிறார் இந்த இளம் வேகப்பந்து வீச்சாளர். இவர் ரன்களை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் முக்கியமான நேரத்தில் அணிக்குத் தேவையான விக்கெட்டுகளையும் எடுத்து கொடுப்பதில் வல்லவர்.
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 12 ஆட்டங்களில் ஆடியுள்ள ரபாடா மொத்தம் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியின் சுழற்பந்துவீச்சாளர் ‘இம்ரான் தாஹிர்’ இருக்கிறார். ஆனால் இவ்விரண்டு பந்துவீச்சாளர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் 8 விக்கெட்டுகள் என்பது கவனிக்கத்தக்கது.
மேலும் தற்போது ரபாடா இருக்கும் சூப்பர் ஃபார்மை வைத்து பார்க்கும் பொழுது இவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இதுவரை ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ‘டுவைன் பிராவோ’ 32 விக்கெட்டுகளை வீழ்த்தியதே ஒரு சீசனில் ஒரு பந்துவீச்சாளர் எடுத்த அதிகபட்ச விக்கெட்டுகள் ஆகும்.
தற்போது 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் ரபாடா மேலும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார். தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டதால் டெல்லி அணிக்கு தற்போது குறைந்தபட்சம் 3 ஆட்டங்கள் (2 லீக் மற்றும் 1 பிளே ஆஃப்) உள்ளது.
எனவே ‘காகிசோ ரபாடா’ இந்த சாதனையை படைப்பதற்கு மிக அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இவர் இந்த சாதனையை முறியடித்தால் அது டெல்லி அணிக்கும் மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.