உலககோப்பை போட்டிகள் மே 29ம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்குகின்றன. இந்நிலையில் உலக கோப்பையில் விளையாடும் அணிகள் 15 பேர் கொண்ட தங்கள் அணியை ஏப்ரல் 23ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணி முதல் ஆளாக தங்கள் அணியை அறிவித்தது. இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் ஒரே நாளில் தங்கள் உலககோப்பை அணியை அறிவித்தன. இந்திய அணியில் மாற்று விக்கெட் கீப்பராக யாரை தேர்வு செய்யப்போகிறார்கள் என்று எல்லா தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். தினேஷ் கார்த்திக்கும் ரிஷப் பண்ட்டும் மாற்று விக்கெட் கீப்பர் இடத்திற்கு போட்டிபோட்டனர். இந்நிலையில் தினேஷ் கார்த்திக் அந்த இடத்தை தட்டிச் சென்றார்.
ஏன் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தீர்கள் என்று தேர்வாளர்களிடம் கேள்வி எழுப்ப பட்ட போது அதற்கு பதிலளித்த தேர்வு குழு தலைவர் MSK பிரசாத், தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்ததற்கான முக்கிய காரணம் அவருடைய அனுபவமும் சிறந்த விக்கெட் கீப்பிங் திறமையுமே அவரை அணியில் தேர்வு செய்ய முக்கிய காரணம் ஆகும் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், பிரதான விக்கெட் கீப்பரான தோனி காயமடைந்தால் மட்டுமே அவர் அணியில் சேர்க்கப்படுவார் என்றும் கூறினார்.
தினேஷ் கார்த்திக் நியூசிலாந்து தொடரில் ஃபார்மின்றி தவித்ததால் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து கழற்றி விடப் பட்டார். தினேஷ் கார்த்திக்குக்கு மாற்றாக வந்த ரிஷப் பண்ட்டும் பேட்டிங்கில் தடுமாறினார். விக்கெட் கீப்பங்கிலும் சோடை போனார். இதனால் உலககோப்பை அணியில் யார் இடம்பெறுவார்கள் என்று ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் இடையே பெரும் விவாதம் நடந்து வந்தது. இந்நிலையில் தான் தினேஷ் கார்த்திக் உலககோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வரும் சக வீரரான ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் உலககோப்பை அணியில் தேர்வானது குறித்து தனது மகிழ்ச்சியை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, "ஒருவர் இந்த உலககோப்பை அணியில் தன் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார் என்றால் அது தினேஷ் கார்த்திக் தான். அவருக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு நியாயம் கிடைத்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் இந்திய அணியின் சிறந்த பினிஷர் தினேஷ் கார்த்திக் தான்". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல்-லில் தடுமாறி வருகிறது. அந்த அணி பெற்ற வெற்றிகளில் முக்கிய பங்கு வகிப்பவர் ஆந்தரே ரஸ்ஸலே ஆவார். மற்ற யாருமே சோபிக்க வில்லை. தினேஷ் கார்த்திக்கும் ஃபார்மின்றி தவித்து வருகிறார். உலககோப்பை அணியில் தேர்வாகி இருப்பது அவருக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும். அதுவும் இல்லாமல் உலககோப்பை போன்ற தொடருக்கு முன்னர் பார்மிற்கு வந்து அணிக்கு நம்பிக்கையை அளிக்கலாம். உலககோப்பை அணியில் இரண்டு தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தினேஷ் கார்த்திக் மற்றும் ஆல் ரவுண்டரான விஜய் சங்கரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜூன் ஒன்றாம் தேதி பிரிஸ்டாலில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது.