பன்னிரண்டாவது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடர் ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கூட முழுமையடையாத நிலையில், நிறைய சுவாரசியமான நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. அதில் முக்கியமான நிகழ்வான 'மன்கட்' விவகாரம் குறித்து அதில் பாதிக்கப்பட்டவரான ஜோஸ் பட்லர் மனம் திறந்துள்ளார். இந்த விவகாரம் சற்று ஓய்ந்துள்ள நிலையில் இதுகுறித்து பட்லர் பேசியுள்ளார். இந்த சீசனின் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை பஞ்சாப் அணி எதிர்கொண்டது.
அந்தப் போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி இலக்கை நோக்கி சுலபமாக சென்று கொண்டிருந்தது. பட்லர் அரைசதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அஸ்வின் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்து வெளியேற்றினார். பட்லர் அவுட் ஆனதும் ஆட்டத்தின் போக்கு பஞ்சாப் அணிக்கு சாதகமாக மாறியது .அந்தப் போட்டியில் பஞ்சாப் அணி எளிதாக வென்றது. அஸ்வின் பட்லரை அவுட் செய்த விதம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் விவாதப் பொருளாக மாறியது. ஒரு புறம் பட்லருக்கு ஆதரவாகவும் அஸ்வினுக்கு எதிராகவும் ரசிகர்கள் விமர்சனங்களை செய்து வந்தனர். அஸ்வின் கிரிக்கெட்டின் புனிதத்தை கெடுத்து விட்டார் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அஸ்வினின் இந்த செயலுக்கு எதிராக பல முன்னணி வீரர்களும் முன்னாள் வீரர்களும் போர்க்கொடி தூக்கினர். மறுபுறம் அஸ்வின் செய்தது சரியே என்றும் அது ஐசிசி விதிகளுக்கு உட்பட்டே அவுட் தரப்பட்டது என்றும் வாதிட்டனர்.
இந்த மன்கட் சர்ச்சை குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பட்லர் கூறியுள்ளதாவது, "கண்டிப்பாக மன்கட் விதி கிரிக்கெட் விதிகளில் இருக்க வேண்டும். பேட்ஸ்மேன் பந்து வீசுவதற்கு முன்பே பிட்சில் பாதி தூரத்தை கடந்துவிடுவது கிரிக்கெட் விதிகளுக்கு எதிரானதாகும். இந்த விதியை வடிவமைத்த விதத்தைப் பார்க்கும்போது அதில் சிறிது தவறு இருப்பதாக தெரிகிறது. பவுலர் பந்தை வெளியிடும் வரை பேட்ஸ்மேன் கிரீசில் இருப்பது கட்டாயமாகிறது. ஆனால் நான் அவுட் செய்யப்பட்ட விதத்தை பார்க்கும்போது பந்துவீசும் நேரம் வரை நான் கிரீசில் தான் இருந்தேன். நான் வெளியே போகும் வரை காத்திருந்து என்னை அஸ்வின் அவுட் செய்தார். இதை கவனிக்கத் தவறிய அம்பயர்கள் எனக்கு தவறாக அவுட் கொடுத்து விட்டனர்".
இவ்வாறு ஜோஸ் பட்லர் கூறினார். இந்த நிகழ்விற்குப் பின் குருனால் பாண்டியா போட்டியின் போது ஒருமுறை பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை அளித்தார். அது பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல் மன்கட் செய்யும் போது ஒரு முறை எச்சரிக்கை செய்த பின்பே அவுட் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான ரசிகர்கள் இந்த முறை கிரிக்கெட் விளையாட்டின் புனிதத்தை கெடுக்கும் விதமாக இருப்பதால் இந்த முறையை எதிர்க்கின்றனர் .அதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க இனிமே பந்து வீசுபவர்கள் மன்கட் முறையில் அவுட் செய்யும் போது முன்னரே எச்சரிக்கை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நடக்கும் லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.