2019 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 வருடங்களுக்கு பிறகு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த காலங்களில் ஒப்பிடுகையில் இவ்வருட ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பேட்டிங் மிகவும் சிறப்பாகவே இருந்தது. தொடர் சீரான ஆட்டத்தை வெளிபடுத்த தவறுகிற ரிஷப் பண்ட் பிளே ஆஃப் சுற்றில் கவணிக்கப்பட வேண்டிய வீரராக உள்ளார். ஆனால் ரிஷப் பண்ட் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தான் தற்போது முன்பை விட அதிகம் பேட்டிங்கில மேம்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரிஷப் பண்ட் 2019 ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 27 பந்துகளில் 78 ரன்களை விளாசி அதிரடி தொடக்கத்தை வெளிபடுத்தினார். 21 வயதான இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல் தொடரில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் அதற்கு பிறகு விளையாடிய 13 போட்டிகளில் 2 அரைசதங்கள் மட்டுமே அடித்தார். மேலும் இவரது மோசமான ஆட்டம் சில போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியை பெரிதும் பாதித்தது.
கிரிக்கெட் போட்டிகளில் ஃபினிஷிங் என்பது மிக முக்கியம் மற்றும் சீரான ஆட்டத்திறனை வெளிபடுத்த பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். ஒரு நாளில் இதனை மாற்றுவது மிகவும் கடினம். இனிவரும் போட்டிகளில் கிடைக்கும் அனுபவத்தை வைத்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முயலுவேன் என ரிஷப் பண்ட் கூறினார். தற்போது தான் முழு நம்பிக்கையுடன் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்குவதாகவும், முன்பை விட தற்போது மிகவும் மேம்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
"என் மேல் வரும் அனைத்து இகழ்வுகளையும் நன்மைகளாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். போட்டியை முடித்து வைப்பது என்பது ஒரு பேட்ஸ்மேனின் முக்கிய கடமையாகும். சீரான ஆட்டத்தை வெளிபடுத்த பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். கிரிக்கெட்டில் அனுபவத்தின் மூலமாகவே தவறுகளை திருத்தி கொள்ள முடியும். இதனை ஒரே நாளில் திருத்துவது என்பது கடினம். எனக்கு 21 வயதே ஆகிறது. 30 வயது அனுபவ வீரர் போல் யோசிப்பது என்பது மிகவும் கடினம். தற்போது எனது ஆட்டத்திறன் எனக்கு புது நம்பிக்கையை எழுப்பியுள்ளது. அத்துடன் மிகவும் மேம்பட்டும் உள்ளேன். மேலும் எனது பேட்டிங்கை வலுபடுத்த எனக்கு சில கால அவகாசம் தேவைப்படுகிறது".
இதற்கிடையில் ரிஷப் பண்ட் இந்திய உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்டது அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எம்.எஸ்.கே பிரசாந்த் தலைமையிலான இந்திய தேர்வுக்குழு ரிஷப் பண்ட்-ஐ விட அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திகிற்கு உலகக் கோப்பை அணியில் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. டெல்லி இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், தற்போது ஒரு கிரிக்கெட் வீரராக எவ்வாறு ஆட்டத்தை கையாள வேண்டும் என்பதை தான் அறிந்துள்ளாதாக தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை அணியிலிருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட்ட பிறகு அவருக்கு அவர் மேல் அதிகப்படியான நம்பிக்கை பிறந்துள்ளது. அணியில் இடம்பெறா விட்டாலும் தனது இயல்பான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிபடுத்தி கொண்டு தான் இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
"உலகக் கோப்பை அணியில் நான் இடம்பெறாததைப் பற்றி நான் வருத்தப்படவில்லை. என் மீது உள்ள குறைகளை களைய இது ஒரு வாய்ப்பாக நான் நினைக்கிறேன். இதனை நான் சரியாக பயன்படுத்தி மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன். ஒரு கிரிக்கெட் வீரராக போட்டியை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை நான் தற்போது நன்கு அறிந்துள்ளேன். நாம் விருப்பபட்டபடி அனைத்து நிகழ்வுகளும் நடக்க வாய்ப்பில்லை. வாய்ப்புகள் நம்மை தேடி வராது, நமக்கான வாய்ப்புகளை நாம்தான் தேடி சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தோல்வியடைந்தால் அதனை நன்மையாக எடுத்துக் கொண்டு போராட வேண்டும். இதனை பின்பற்றினால் தான் நம்முடைய அடுத்த இலக்கை நாம் அடைய முடியும்"
உலகக் கோப்பை இந்திய அணியின் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளார். ரிஷப் பண்ட்-டின் தற்போதைய இலக்கு வரும் மே 8 அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு அருகில் டெல்லி கேபிடல்ஸ் அணியை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான்.