ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடர் வருகிற 30-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தொடர் ஜூலை மாதம் 14ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது. எனவே, 2019 ஐபிஎல் தொடர் உலக கோப்பை தொடர் துவங்க 20 நாட்களுக்கு முன்னர், ஐபிஎல் முடிவடைந்தது. இந்த சீசனில் இந்திய மற்றும் வெளிநாட்டு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் அப்படிப்பட்ட வீரர்களில் குறிப்பிட வேண்டிய மூன்று சிறந்த வீரர்கள் இந்த உலக கோப்பை தொடரில் ஜொலிக்க உள்ளனர். அவர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.மகேந்திர சிங் தோனி:
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தோனி ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றவில்லை மற்றும் தொடரை வென்று தரவில்லை. இருப்பினும், இவரது பங்கு போற்றத்தக்கது. சென்னை அணியின் முக்கிய தூணாக விளங்கிய இவர், அணி இறுதிப் போட்டி வரை முன்னேறுவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தார். மேலும், 2019 சீசனில் சென்னை அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரரும் இவரே. இவர் விளையாடிய 12 போட்டிகளில் 416 ரன்களை குவித்து அமர்க்களப்படுத்தினார். மேலும், விக்கெட் கீப்பிங் பணியிலும் அருமையாக தமது பங்கை அளித்தார். எனவே, உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு போதிய ஆலோசனைகள் அவ்வப்போது களத்தில் வழங்கவும் உள்ளார். இவரின் வழிகாட்டுதல் கேப்டன் விராட் கோலிக்கு பெரிதும் உதவும். மேலும், இந்த உலக கோப்பை தொடரில் இவர் ஓய்வு பெற இருப்பதால் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஆட்டத்தினை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2.டேவிட் வார்னர்:
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த டேவிட் வார்னர், நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். உலக கோப்பை முன்னேற்பாடுகளால் தொடர் முடியும் முன்னே ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பினார். இருப்பினும், இவர் தான் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் ஆவார். 12 போட்டிகளில் விளையாடிய இவர் 692 ரன்களை குவித்து. ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது சில வீரர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இருப்பினும், எந்த ஒரு சூழ்நிலையிலும் தனக்கேற்றபடி ஆடும் வீரரான டேவிட் வார்னர், அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் விளையாடக்கூடிய வீரராவார். எனவே, உலக கோப்பையில் இவரின் தாக்கம் சற்று கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
#1.ஆந்திரே ரசல்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்ற அதிரடி வீரர் ரசல். ஐபிஎல் தொடரின் மிக அபாயகரமான வீரர்களில் ஒருவராக இருந்தார். சந்தேகமின்றி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்லுக்கு அடுத்தபடியாக முக்கியமான வீரராக இவர் திகழ்வார் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆட்டத்தின் இறுதிக்கட்ட நேரங்களில், எவ்வித பந்து வீச்சு தாக்குதல்களையும் சமாளித்து ரன்களை அபாரமாக குவிக்கும் திறன் பெற்ற இவர், உலக கோப்பை தொடரில் பல சாதனைகளை புரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 510 ரன்களை குவித்து மாயாஜாலம் காட்டினார். இவர் இந்த சீசனில் 52 சிக்சர்களை அடித்து தொடரின் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றார். பந்துவீச்சிலும் 11 விக்கெட்களை கைப்பற்றி நம்பிக்கை அளித்துள்ளார். எனவே, இவரது ஆல்-ரவுண்டர் திறமை உலக கோப்பை தொடரில் பெரும்பாலான போட்டிகளில் எடுபட்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி பெறுவதற்கு உதவும் என நம்பலாம்.