2019 உலக கோப்பை தொடர் வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் எதிர்கொள்ள இருக்கின்றன. இந்தத் தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான நியூசிலாந்து அணி, கடந்த முறை நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தது. தற்போது முடிந்துள்ள ஐபிஎல் தொடரில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் செயல்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை. எனவே, இந்த ஐபிஎல் தொடரில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் எவ்வாறு செயல்பட்டனர் என்பதை இந்த தொகுப்பு விளக்குகின்றது.
#1.டிம் சவுதி:
நியூசிலாந்து அணியின் வலதுகை வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி. இம்முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பெற்றார். அணியின் இறுதி கட்ட ஓவர்களை இவர் வீசுகையில் சர்வ சாதாரணமாக 20 ரன்களை வாரி வழங்கினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆந்திரே ரசல் பேட்டிங் செய்தபோது பந்துவீசிய டிம் சவுத்தி ஒரே ஓவரில் 29 ரன்களை அள்ளிக் கொடுத்தார். மேலும், அந்தப் போட்டியில் பெங்களூர் அணி தோற்க இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
#2.லாக்கி பெர்குசன்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்ற லாக்கி ஃபெர்குசன், வெறும் 5 போட்டிகளில் விளையாடி 183 ரன்களை வழங்கியுள்ளார். அவற்றில், இவர் வெறும் 2 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றினார் என்பது குறிப்பிடதக்கது. மேலும், இவரது பந்துவீச்சு எக்கனாமி பத்துக்கும் மேல் சென்றது. நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் இவரின் செயல்பாடு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது.
#3.டிரென்ட் போல்ட்:
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த டிரென்ட் போல்ட், பெரும்பாலான போட்டிகளில் களமிறங்கவில்லை. அணியில் இடம் பெற்று இருந்த மற்றொரு வீரரான ரபாடா காயம் காரணமாக விலகிய பிறகு, அணியில் 5 போட்டிகளில் களமிறங்கினார், டிரென்ட் போல்ட். ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்களை வீசுகையில், இவரின் எக்கனாமி 12க்கும் மேல் சென்றது. ஒட்டுமொத்த எக்கனாமி 8.57 என்ற வகையில் அமைந்தது. எனவே, இவரும் இந்த சீசனில் ரன்களை வாரி வழங்கிய வள்ளல்களில் ஒருவர்.
எனவே, உலக கோப்பை தொடர் துவங்கஇருக்கும் நிலையில், இனி இதுபோன்ற மோசமான செயல்பாடுகள் தொடர்ந்தால் நியூசிலாந்து அணி அரையிறுதிப் போட்டிக்கு கூட தகுதி பெற முடியாது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.