அதிரடிக்கு பெயர் போன ஐபிஎல் தொடரானது, கடந்த 2008ம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 வருடமாக நமது இந்தியாவில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். இந்த 8 அணிகளில், ஒரு சில அணிகள், சில போட்டிகளில் சூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்றுள்ளனர். அந்த போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) ராஜஸ்தான் ராயல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ( 2014 ஆம் ஆண்டு )
ராஜஸ்தான் ராயல்ஸ் – 152/5 ( 20 ஓவர்கள் )
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 152/8 ( 20 ஓவர்கள் )
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானே மற்றும் கருண் நாயர் ஆகிய இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே கருண் நாயர் 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின்பு ரகானேவும், சஞ்சு சாம்சனும் ஜோடி சேர்ந்தனர். மிக சிறப்பாக விளையாடிய ரகானே, 59 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார். இதில் 1 சிக்சரும், 6 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் அடித்தது.
153 ரன்கள் எடுத்தால் வெற்றி, என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கவுதம் கம்பீர் மற்றும் பிஸ்லா ஆகிய இருவரும் களமிறங்கினர். கௌதம் கம்பீர் 44 பந்துகளில் 45 ரன்கள் அடித்து, கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார்.
மிடில் ஆர்டரில் வந்த சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் கொல்கத்தா அணி வெற்றி பெற ஒரு பந்துக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பேட்டிங் செய்த ஷாகிப் அல் ஹசன், 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனவே போட்டி டையில் முடிந்தது. பின்பு சூப்பர் ஓவர் போட்டி நடத்தப்பட்டது.
சூப்பர் ஓவர்:
சூப்பர் ஓவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த சூப்பர் ஓவரில் மணிஷ் பாண்டே ஒரு சிக்சரை விளாசினார். இறுதியில் சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி 11 ரன்கள் எடுத்தது. ஆனால் ராஜஸ்தான் அணியும் இந்த சூப்பர் ஓவரில் 11 ரன்கள் எடுத்தது. எனவே மீண்டும் போட்டி டையில் முடிந்தது. கொல்கத்தா அணியை விட, ராஜஸ்தான் அணி அதிக பவுண்டரிகள் அடித்து இருந்ததால், ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
#2) ராஜஸ்தான் ராயல்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் ( 2015 ஆம் ஆண்டு )
ராஜஸ்தான் ராயல்ஸ் – 191/6 ( 20 ஓவர்கள் )
கிங்ஸ் லெவன் பஞ்சாப் – 191/6 ( 20 ஓவர்கள் )
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானே மற்றும் வாட்சன் ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி, ராஜஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ரகானே 54 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார். ரகானேவுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய வாட்சன், 35 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது.
192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. முரளி விஜய் மற்றும் சேவாக் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த ஷான் மார்ஷ் 40 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும்.
மிடில் ஆர்டரில் வெளுத்து வாங்கிய டேவிட் மில்லர், 30 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார். இதில் 5 சிக்சர்கள் அடங்கும். இறுதியில் பஞ்சாப் அணி வெற்றி பெற, கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் அக்சார் படேல் ஒரு பவுண்டரியை விளாசினார். எனவே போட்டி டையில் முடிந்ததால், சூப்பர் ஓவர் போட்டி நடத்தப்பட்டது.
சூப்பர் ஓவர்:
சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது, இந்த சூப்பர் ஓவரில் ஷான் மார்ஷ் 3 பவுண்டரிகளை விளாசியதன் மூலம், பஞ்சாப் அணி 15 ரன்கள் அடித்தது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சூப்பர் ஓவரில் முதல் 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்து விட்டது. எனவே பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.