அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகப் பிடித்தமான ஒரு தொடர் என்றால், அது ஐபிஎல் தொடர் தான். ஏனெனில் இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் விறுவிறுப்புக்கும், அதிரடிக்கும் பஞ்சம் இருக்காது. இந்த ஐபிஎல் தொடரில் சூப்பர் ஓவர் வரை விறுவிறுப்பாக சென்ற போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) ராஜஸ்தான் ராயல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ( 2009 ஆம் ஆண்டு )
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வார்னே கேப்டனாகவும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பிரண்டன் மெக்கலம் கேப்டனாக செயல்பட்டார். இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மித் மற்றும் வல்தாட்டி ஆகிய இருவரும் களமிறங்கினர்.
இருவருமே தொடக்கத்திலேயே தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன் பின்பு வந்த யூசுப் பதான் அதிரடியாக விளையாடினார். யூசுப் பதான் 21 பந்துகளில் 42 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரிகளுடன், 2 சிக்சர்களும் அடங்கும். அதன் பின்பு வந்த ரவீந்திர ஜடேஜா மட்டும் சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடினார். பின்பு அவரும் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு, 150 ரன்கள் எடுத்தது.
151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் பிரண்டன் மெக்கலம் ஆகிய இருவரும் களமிறங்கினர். அதிரடியாக 4 சிக்சர்கள் விளாசிய கிறிஸ் கெயில், 33 பந்துகளில் 41 ரன்கள் அடித்தார். மிடில் ஆர்டரில் அதிரடி காட்டிய கங்குலி, 30 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற ஒரு பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அப்போது பேட்டிங் செய்த இஷாந்த் ஷர்மா ஒரு ரன் மட்டுமே எடுத்தார். எனவே போட்டி டையில் முடிந்தது. அதன் பின்பு சூப்பர் ஓவர் போட்டி நடத்தப்பட்டது.
சூப்பர் ஓவர்:
சூப்பர் ஓவரில் முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் சூப்பர் ஓவரை கம்ரான் கான் வீச வந்தார். சூப்பர் ஓவரில் கிரிஸ் கெயில் அதிரடியாகப் 3 பவுண்டரிகளை விளாசியதன் மூலம், கொல்கத்தா அணி சூப்பர் ஓவரில் 15 ரன்கள் அடித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சூப்பர் ஓவரில் வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டது.
கொல்கத்தா அணி சார்பில் மென்டிஸ், சூப்பர் ஓவரை வீச வந்தார். அந்த சூப்பர் ஓவரில் யூசுப் பதான் அதிரடியாக இரண்டு சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசினார். சூப்பர் ஓவரில் இன்னும் இரண்டு பந்துகள் மீதம் இருந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
#2) கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் ( 2010 ஆம் ஆண்டு )
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரவி பொப்பாரா மற்றும் இர்பான் பதான் ஆகிய இருவரும் களமிறங்கினர். இர்பான் பதான் 32 பந்துகளில் 39 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய யுவராஜ் சிங், 28 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.
137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக பார்த்தீவ் படேல் மற்றும் ஹைடன் ஆகிய இருவரும் களம் இறங்கினர். இருவரும் மிகச் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். அதுவும் குறிப்பாக பார்த்தீவ் படேல் 58 ரன்கள் விளாசினார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் போட்டி டையில் முடிந்ததால், சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
சூப்பர் ஒவர்:
பஞ்சாப் அணியின் சார்பில் முத்தையா முரளிதரன், சூப்பர் ஓவரை வீச வந்தார். இந்த சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் அல்பி மோர்கல் சூப்பர் ஓவரை வீச வந்தார். இந்த சூப்பர் ஓவரில், முதல் நான்கு பந்துகளிலேயே பஞ்சாப் அணி எளிதாக வெற்றி பெற்று விட்டது. சூப்பர் ஓவரில் மஹேலா ஜெயவர்த்தனே ஒரு சிக்சரும், யுவராஜ் சிங் ஒரு பவுண்டரியும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.