ஐபிஎல் தொடரில் மட்டும்தான், போட்டி டையில் முடிந்தால் சூப்பர் ஓவர் போட்டி நடத்தப்படும். இந்த சூப்பர் ஓவர் போட்டிகள் பார்ப்பதற்கே சுவாரசியமாக இருக்கும். இவ்வாறு சூப்பர் ஓவர்கள் நடத்தப்பட்ட போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
( 2013ஆம் ஆண்டு )
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 130/8 ( 20 ஓவர்கள் )
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 130/7 ( 20 ஓவர்கள் )
2013 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் தில்ஷன் ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவருமே ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினர். அதன் பின்பு விராட் கோலி சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அதன் பிறகு விராட் கோலியும் 46 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 130 ரன்கள் மட்டுமே அடித்தது.
131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பார்த்திவ் படேல் மட்டும் ரெட்டி ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவருமே பவர் பிளே ஓவர்களில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அடுத்து வந்த ஹனுமா விஹாரி மட்டும் சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடினார். பின்பு அவரும் 44 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் ஹைதராபாத் அணியும் 20 ஓவர்களின் முடிவில் 130 ரன்கள் அடித்ததால், போட்டி டையில் முடிந்தது. அதன் பிறகு சூப்பர் ஓவர் போட்டி நடத்தப்பட்டது.
சூப்பர் ஓவர்:
சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. பெங்களூர் அணியின் சார்பில் வினய் குமார் சூப்பர் ஓவரை வீச வந்தார். இந்த சூப்பர் ஓவரில் பெரேரா மற்றும் கேமரூன் ஒயிட் ஆகிய இருவரும் தலா ஒரு சிக்சர் விளாசினர். ஹைதராபாத் அணி இந்த சூப்பர் ஓவரில் 20 ரன்கள் அடித்தது. பெங்களூர் அணி சூப்பர் ஓவரில் வெறும் 15 ரன்கள் மட்டுமே அடித்து, தோல்வியை தழுவியது.
#2) டெல்லி கேபிடல்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ( 2013 ஆம் ஆண்டு )
டெல்லி கேபிடல்ஸ் – 152/5 ( 20 ஓவர்கள் )
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 152/7 ( 20 ஓவர்கள் )
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் சேவாக் ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவருமே பவர் பிளே ஓவர்கள் முடிவதற்குள் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசி நேரத்தில் வந்து அதிரடியாக விளையாடிய கேதார் ஜாதவ், 16 பந்துகளில் 29 ரன்கள் அடித்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் அடித்தது.
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களம் இறங்கியது. பெங்களூர் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் கெயில், வெறும் 13 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு விராட் கோலி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். விராட் கோலி 50 பந்துகளில் 65 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் பெங்களூர் அணியும் 20 ஓவர்களின் முடிவில் 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே போட்டி டையில் முடிந்தால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
சூப்பர் ஓவர்:
சூப்பர் ஓவரில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. டெல்லி அணி சார்பில் உமேஷ் யாதவ் சூப்பர் ஓவரை வீச வந்தார். இந்த சூப்பர் ஓவரில் ஏபி டி வில்லியர்ஸ் 2 சிக்சர்களை விளாசினார். எனவே பெங்களூர் அணி இந்த சூப்பர் ஓவரில் 15 ரன்கள் அடித்தது. ஆனால் டெல்லி அணி சூப்பர் ஓவரில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.