12வது ஐபிஎல் தொடர் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வருகிறது. 56 லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதன்படி, நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றில் மும்பை அணியிடம் தோல்வியுற்றது, சென்னை அணி. நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில், டெல்லி அணியிடம் ஹைதராபாத் அணி தோல்வியுற்றது. இதன்பின்னர், நாளை நடைபெறவிருக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய இரு அணிகள் மோதுகின்றன. நாளைய போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெறும். எனவே, நாளைய போட்டியில் டெல்லி அணியின் வெற்றிக்கு பங்களிக்கும் மூன்று சிறந்த வீரர்களை இந்த பட்டியல் விவரிக்கின்றது.
#1.ஷிகர் தவான் - வேகமான தொடக்கம்:
நடப்பு ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 503 ரன்கள் குவித்துள்ளார், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான தவான். மேலும், இவர் நடப்பு தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 97 ரன்களை அடித்து சதம் அடிக்க தவறினார். இதுவே நடப்பு தொடரில் இவரது சிறந்த ஆட்டமாக அமைந்துள்ளது. எனவே, நாளை நடைபெற உள்ள இரண்டாவது தகுதிச்சுற்றில் இவரின் பங்கு டெல்லி அணியின் வெற்றிக்கு உதவும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
#2.ஸ்ரேயாஸ் அய்யர் - திடமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்:
ஐபிஎல் போட்டிகளில் சில வீரர்கள் கேப்டன் பணியுடன் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவற்றில் ஒருவர், டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர். இவர் இதுவரை விளையாடியுள்ள 15 போட்டிகளில் 450 ரன்களை கடந்துள்ளார். மேலும், நடப்பு தொடரில் மூன்று அரை சதங்களை அடித்துள்ளார். டெல்லி அணியின் பேட்டிங் தூணாக விளங்கும் இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நாளைய போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
#3.ரிஷப் பண்ட் - ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைப்பவர்:
இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், டெல்லி அணியின் அபாயகரமான வீரராக திகழ்கிறார். இவரும் நடப்பு தொடரில் 450 ரன்களை குவித்துள்ளார். மேலும், இவரது ஸ்ட்ரைக் ரேட் 163 என்ற வகையில் அபாரமாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 27 பந்துகளில் 78 ரன்கள் குவித்து தனியாளாய் அணிக்கு வெற்றியை தேடி தந்தார். நேற்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை வென்றார். எனவே, நாளைய போட்டியில் இவரது வானவேடிக்கை தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.