மும்பை இந்தியன்ஸ் அணி முன்னாள் சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றதற்க்குப் பிறகு ஒரு புது நம்பிக்கையுடன் திகழ்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரில் விளையாடிய 3 போட்டிகளும் வெற்றிகளை குவித்தது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 4வது போட்டியில் தோல்வியை தழுவியது.
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அடுத்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. 2016ஆம் ஆண்டின் ஐபிஎல் சேம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஐபிஎல் சீசனில் வலிமையான அணியாக திகழ்கிறது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மிகவும் வலிமையான அணியாக திகழும் என்பதில் சந்தேகமில்லை. மும்பை அணி நிர்வாகம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சில தைரியமான மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியை தழுவினால் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு பெரும் நெருக்கடியை சந்திக்கும். நாம் இங்கு ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தைரியமாக மாற்ற விரும்பும் 3 வீரர்களை பற்றி காண்போம்.
#1 இஷான் கிசான் உள்ளே - யுவராஜ் சிங் வெளியே
யுவராஜ் சிங் தொடக்க ஆட்டத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசினார். இடது கை பேட்ஸ்மேனான இவரது ஆட்டம் பழைய மாதிரி இல்லை. பஞ்சாப் ஸ்டார் ஆல்-ரவுண்டர் கடந்த இரு போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது மும்பை இந்தியன்ஸ் அணியை பெரிதும் பாதித்தது.
யுவராஜ் சிங் போன்ற நட்சத்திர அனுபவ வீரரை ஆடும் XI-லிருந்து நீக்குவது மிகவும் கஷ்டமான நிகழ்வாகும். அணியின் வெற்றியை கருத்தில் கொண்டு மும்பை இந்தியன்ஸ் இந்த முடிவை மேற்கொள்ளும். மும்பை ஆடும் XIலிருந்து வெளியே இருக்கும் இஷான் கிசான் அதிரடி ஷாட்களை விளாசி ரன் ரேட்டை அதிகபடுத்தும் திறமை உடையவர். உள்ளூர் கிரிக்கெட் நட்சத்திர வீரரான இவர் தனக்கு அளிக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொள்வார்.
20 வயதான இளம் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் இஷான் கிசான் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை அதிகம் கவர்ந்துள்ளார். ஒரு பெரிய ரன் குவிப்பை கடந்த ஐபிஎல் தொடரில் வெளிபடுத்த இவர் தவறிவிட்டார். இஷான் கிசான் டாப் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு சற்று வேலைப்பளு குறைவாக இருக்கும்.
#2 மீண்டும் மிடில் ஆர்டரில் களமிறங்கும் ரோகித் சர்மா
ரோகித் சர்மா இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக தொடக்கத்தை அளித்து வருகிறார். ஆனால் ஒரு பெரிய ரன் குவிப்பில் ஈடுபடவில்லை. இந்திய சர்வதேச தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்குவதால் அந்த அணியின் மிடில் ஆர்டர் மோசமடைந்து விட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி யுவராஜ் சிங்கை ஆடும் XI-லிருந்து நீக்க முடிவெடுத்தால் மிடில் ஆர்டரில் ஒரு சிறந்த அனுபவ ஆல்-ரவுண்டரை இழக்கும்.
இதனால் ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் இறங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார். ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறக்கப்பட்டால் அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் ஒரு நிலையான ஆட்டம் வெளிபடும். மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியாவை தவிர ஒரு பெரிய ஹிட்டர் என யாரும் இல்லை. எனவே கேப்டன் ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளார்.
பொதுவாக வலது கை பேட்ஸ்மேன்கள் இக்கட்டான சூழ்நிலையில் ஆட்டத்தை சிறப்பான முறையில் எடுத்துச் செல்வர். மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இவர் மிடில் ஆர்டரில் களமிறங்கி ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் ரேட்டை சரியாக நிர்வகிப்பார். அத்துடன் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும் ரோகித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன்களை மிடில் ஆர்டரில் உயர்த்துவார். பேட்டிங் வரிசை மாற்றுவது ஒரு கடும் முடிவுதான். இருப்பினும் இந்த முடிவை மேற்கொண்டால் அணியின் வலிமை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
#3 பென் கட்டிங் உள்ளே - கீரன் பொல்லார்ட் வெளியே
இந்த சீசனில் பென் கட்டிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரேயொரு போட்டியில் மட்டுமே களமிறங்கியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் பென் கட்டிங். 2019 பிக்பேஸ் தொடரிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
டெத் ஓவரில் சிறப்பான பேட்டிங்கையும், பந்துவீச்சில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் வல்லவராக திகழ்கிறார் பென் கட்டிங். இவரது ஆல்-ரவுண்டர் ஆட்டத்திறன் டி20 கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதால் இதனை மும்பை இந்தியன்ஸ் அணி பயன்படுத்தி கொள்ள வேண்டும். கீரன் பொல்லார்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் பொல்லார்டின் இயல்பான ஆட்டத்திறன் மற்ற எந்த போட்டியிலும் வெளிப்படவில்லை.
மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்-ரவுண்டர் மற்றும் ஐபிஎல் லெஜன்ட் கீரன் பொல்லார்ட் இன்றளவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது பங்களிப்பை அளித்து வருகிறார். வயதாகி விட்டதால் இவரால் பந்து வீச முடியவில்லை. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் எக்ஸ்ட்ரா பௌலர்கள் இன்றி தடுமாறுகிறது. பென் கட்டிங் பௌலிங்கிலும் அசத்துவார் என்பதால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் இவர் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறார்.