நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து 2019 ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் அடியெடுத்து வைத்தது, டெல்லி கேப்பிடல்ஸ். இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்தபடியாக புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களில் ஒன்றை உறுதி செய்தது, டெல்லி கேப்பிடல்ஸ். முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் ஆட்டத்தின் முதல் 3 ஓவர்களில் 30 ரன்கள் குவித்தது. ஆனால், உமேஷ் யாதவ் வீசிய பந்தில் பிருத்திவி ஷா பார்த்தீவ் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர், ஷிகர் தவானுடன் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கைகோர்த்தார். இந்த இணை மிகச் சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. இன்னிங்ஸ் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 187 ரன்கள் குவித்து இருந்தது. பின்னர், பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 ஓவர்களின் முடிவில் 63 ரன்கள் எடுத்திருந்தது. இதற்கு அடுத்து ரபாடா வீசிய பந்தில் பார்த்தீவ் பட்டேல் விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்த ஓவர்களில் பெங்களூர் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டை இழந்து நடையைக்கட்டினார். குர்கீரத் சிங் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் அணிக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அவ்வப்போது சில பவுண்டரிகளை அடித்தனர். இறுதிகட்ட ஓவர்களில் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் பெங்களூர் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது, டெல்லி கேப்பிடல்ஸ். எனவே, இந்த வெற்றிக்காண மூன்று காரணங்களை பற்றி விவரிக்கின்றது இந்த தொகுப்பு.
#1.ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்ரின் திடமான பார்ட்னர்ஷிப்:
ஆரம்பத்திலேயே பிருத்திவி சாவின் விக்கெட்டை இழந்தபோதிலும் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் நம்பிக்கை அளித்து மிகச்சிறந்த கூட்டணியை அமைத்து தந்தனர். இவர்களது பார்ட்னர்ஷிப்பில் 53 பந்துகளில் 68 ரன்கள் டெல்லி அணிக்கு வந்தது. ஷிகர் தவான் 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உட்பட 50 ரன்களை கடந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 37 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 52 ரன்களை குவித்தார்.
#2.இறுதிக்கட்ட ஓவர்களில் விளாசிய அக்ஷர் பட்டேல் மற்றும் ரூதர்போர்டு:
17வது ஓவரின் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்து இருந்தது. அந்த சமயத்தில், ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல், ரூதர்போர்ட் உடன் இணைந்து அபாரமாக ரன்களை குவிக்க தொடங்கினார். இவர்கள் இருவரும் இணைந்து 19 பந்துகளில் 46 ரன்களை கொண்டுவந்தனர். பெங்களூரு பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோரின் இன்னிங்சின் கடைசியில் ஓவர்களில் 36 ரன்களை இவர்கள் திரட்டினர். அக்சர் படேல் 9 பந்துகளில் 16 ரன்களையும் ரூதர்ஃபோர்டு 13 பந்துகளில் 28 ரன்களையும் குவித்தனர்.
#3.கடைசி 3 ஓவர்களில் ரபாடா மற்றும் இஷாந்த் சர்மாவின் துல்லியமான பந்துவீச்சு:
பெங்களூரு அணி இலக்கை துரத்தும்போது 17 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை குவித்து இருந்தது. கடைசி 3 ஓவர்களில் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசி அணியை வெற்றி பெறச் செய்தனர். 18 மற்றும் 20-ஆவது ஓவர்களை வீசிய ரபாடா முறையே 6 மற்றும் 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இருந்தார். அதேபோல், 19-வது ஓவரை வீசிய இசாந்த் சர்மா வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்து இருந்தார்.