நடப்பு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆப் சுற்றுகள் தொடங்க இன்னும் ஓரிரு நாட்களே உள்ளது. இதுவரை ப்ளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய மூன்று அணிகள் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய நான்கு அணிகளுக்குள் கடும் போட்டி நிலவிகின்றன. இவற்றில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளின் வாய்ப்பு சற்று கூடுதலாக உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சில பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகளால் ஆட்டத்தின் போக்கே மாறி வந்துள்ளது. அதில் குறிப்பிடும் வகையில், சில இளம் இந்திய பந்துவீச்சாளர்கள் தங்கள் அணிகளுக்காக சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடித் தந்துள்ளனர்.
அவற்றில், சிறந்த மூன்று இளம் இந்திய பந்துவீச்சாளர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.ஸ்ரேயாஸ் கோபால்:
கர்நாடகாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான இவர், நடப்பு தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 13 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும், தொடரின் அதிக விக்கெட்டை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திலும் உள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். அவற்றில் விராத் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரின் விக்கெட்களை இவர் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2.தீபக் சாஹர்:
உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் பந்துவீச்சாளரான இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 பந்துகளை டாட் பந்துகளாக வீசினார். இதன் மூலம், ஐபிஎல் போட்டியில் அதிக டாட் பந்துகளை வீசிய பந்து வீச்சாளர் என்ற சிறப்பைப் பெற்றார். எனவே, இவரின் தொடர்ச்சியான பங்களிப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல உதவும் என எதிர்பார்க்கலாம்.
#3.கலீல் அஹமது:
இவர் விளையாடியுள்ள 7 போட்டிகளில் 14 விக்கெட்களைச் சாய்த்து தொடர்ந்து ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு உதவி வருகிறார், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்களையும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்களையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்களையும் வீழ்த்தி அபார பார்மில் இருந்து வருகிறார், கலீல் அஹமது. மேலும், 16 என்ற இவரது பவுலிங் சராசரி, நடப்பு தொடரில் சிறந்த பவுலிங் சராசரியை கொண்ட வீரர்களின் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் உள்ளது. ஒவ்வொரு 12 பந்துக்களுக்கும் ஒரு விக்கெட்டை இவர் வீழ்த்தி வருகிறார்.