டி20 போட்டிகளானது பேட்ஸ்மேன்களுக்கு உரித்தான போட்டியாகும். ஆனாலும் கடந்த சில ஐபிஎல் தொடர்களில் பந்துவீச்சாளர்களின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஆடம் ஜாம்பா ஒரே போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் ஜோசப் ஒரே போட்டியில் 6 விக்கெட்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார். 2019 ஐபிஎல் தொடரில் இளம் வீரர் கலீல் அஹ்மது வெறும் 9 போட்டியில் மட்டுமே விளையாடி 19 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். அனுபவ சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இளம் வீரர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் பதினொரு போட்டியில் விளையாடி 16 விக்கெட்களை கைப்பற்றி ஆச்சரியம் அளித்தார். எனவே, இது போன்றதொரு சிறப்பான பந்து வீச்சு தாக்குதலைத் தொடுத்த மூன்று சிறந்த இந்திய வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.பும்ரா:
ஒருநாள் போட்டிகளில் தற்போது நம்பர் ஒன் பந்துவீச்சாளராக வலம் வரும் பும்ரா, ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்களில் திறம்பட பந்துவீசி அமர்க்களப்படுத்தி வருகிறார். சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இவர் 16 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்களை 6.65 என்ற எக்கனாமிக் உடன் கைப்பற்றியுள்ளார். பல்வேறு அணியினரும் பும்ராவின் பந்து வீச்சை எதிர்கொள்ள திணறி ரன்களை குவிக்க தவறினர். எனவே, இந்திய அணி நிர்வாகமும் உலக கோப்பை தொடரில் இவர் நன்றாக செயல்படுவார் என நம்பியுள்ளது.
#2.ஸ்ரேயாஸ் கோபால்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் கோபால், நடப்பு தொடரில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை கொண்டுள்ளார். இவர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னேயின் வழிகாட்டுதலின்படி, சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவர் விளையாடிய 14 போட்டிகளில் 20 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். மேலும், பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் தொடர்ந்து 3 பந்துகளில் 3 விக்கெட்களை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இவர் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டையாவுது கைப்பற்றி அணிக்கு நம்பிக்கை அளித்து வந்தார். இந்திய அணியின் வருங்கால ஆல்ரவுண்டர் தற்போது தயாராகிவிட்டார்.
#3.தீபக் சாகர்:
தமது நேர்த்தியான பவுலிங் தாக்குதலால் ஆட்டத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை எதிரணியின் பேட்ஸ்மேன்களை கலங்க செய்துள்ளார், தீபக் சாகர். தோனியின் தலைமையின் கீழ் விளையாடுவதால் இவர் கூடுதல் நன்மை கிடைத்துள்ளது. 17 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்களை கைப்பற்றினார். மேலும், இவரது பவுலிங் எக்கனாமி 7.47 என்ற அளவில் சிறப்பாக உள்ளது. இதுவரை ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடி 4 ஓவர்களில் 44 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இருப்பினும், இனி வரும் சர்வதேச போட்டிகளில் இவரை அணி தேர்வாளர்கள் நிச்சயம் தேர்வு செய்வார்கள் என நம்பலாம்.