இந்த ஆண்டு ஐபிஎல் சீசனானது கடந்த வாரம் வெற்றிகரமாக முடிவுற்றது. அதுமட்டுமன்றி , இந்த சீசனின் தொடக்கம் நன்றாக அமையாவிட்டாலும், அதற்குப் பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு போட்டிகளும் கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பையும் எண்ணிலடங்கா ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. மேலும், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சீசனின் கடைசி போட்டியில் லசித் மலிங்கா வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தானது வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியானது நான்காவது முறையாக தொடரைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பை இந்த ஆண்டு நடக்க இருக்கும் நிலையில், இது உலக கோப்பையில் விளையாட உள்ள போட்டியாளர்களுக்கு தங்களுடைய பார்மை நிரூபணம் செய்ய ஒரு நல்ல வாய்பாகும். மேலும், பல்வேறு வீரர்கள் இந்த வாய்ப்பை மிகவும் ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்திக்கொண்டனர். அவ்வாறு, இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் அபாரமாக விளையாடிய மூன்று போட்டியாளர்களை பற்றி காணலாம்.
#1.இம்ரான் தாஹிர்:
தென் ஆப்பிரிக்க அணியின் சுழல் பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர், ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக விளையாடி வருகின்றார். லெக் ஸ்பின்னில் மிகவும் கை தேர்ந்த இவர் தொடக்கத்திலிருந்தே தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 9-ரன்களுக்கு 3-விக்கெட்டுகளை வீழ்த்தி பெரும் சவாலாக அமைந்தார்.
திறமையான பவுலரான இவர், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக நடந்து முடிந்த 2019 ஐபிஎல் சீசனில் இவர் 17 போட்டிகளில் விளையாடி 26- விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், இவரின் எக்கானமி ஆனது 6.69ஆக உள்ளது.
#2. டேவிட் வார்னர்:
ஆஸ்திரேலிய அணியை சார்ந்த டேவிட் வார்னர், கடந்தாண்டு 2018 ஐபிஎல் சீசனில் விளையாட வில்லை. எனினும், சிறிதும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல் தொடர்ந்து பேட்டிங் திறனை நிரூபித்து வருகிறார் இந்த அனுபவமிக்க வீரர்.
இந்த சீசனில் 12 போட்டிகள் விளையாடியுள்ளார். எனினும், இவ்வளவு குறைவான போட்டிகளில் விளையாடிய போதிலும் என்னுடைய அணிக்கு இவரும் பேர்ஸ்டோவும் தொடக்க ஆட்டக்காரர்களாக இணைந்து ஹைதராபாத் அணிக்காக அருமையாக விளையாடி வெற்றியைத் தேடித் தந்தனர். அதுமட்டுமின்றி ஹைதராபாத் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இவர்களே என்று கூறுவதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. இவர் விளையாடிய 12 போட்டிகளில் 692 ரன்களை விளாசியுள்ளார். இந்த சீசனின் ஆரஞ்சு கேப்பினை தக்கவைத்த இவரின் ஆவரேஜ் ஆனது 69.20 ஆக உள்ளது.
#3. ஆந்திரே ரசல்:
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான ரசல், இந்த சீசனின் அதிவேக ஆட்டக்காரராக வலம் வந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் அதிரடியாக விளையாடி கொல்கத்தா அணிக்கு ஏற்படுத்தித் தந்தார். கொல்கத்தா அணியை பெரிதும் தனி மனிதனாக நின்று இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து மீட்ட ஒரே வீரர் இவரே. எடுத்துக்காட்டாக பெங்களூருக்கு அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி 210 என்ற பெரிய இலக்கினை நிர்ணயம் செய்தது. கொல்கத்தா அணியில் எவரும் சரியாக விளையாடாத ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வெறும் 13 பந்துகளில் 48 ரன்களை விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
14 போட்டிகளில் விளையாடியுள்ள ரசல், மொத்தம் 510 ரன்களை விளாசியுள்ளார். அது மட்டுமின்றி, இவருடைய ஆவரேஜ் ஆனது 56.66 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 204.81 ஆகவும் உள்ளது. மேலும் இவர் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ப்ளே ஆப் சில் கொல்கத்தா அணி விளையாடாத போதிலும் ஆந்திரே ரசல் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு பிடித்தமான ஆல்ரவுண்டராக மாற்றம் கண்டுள்ளார்.