பன்னிரண்டாவது இந்தியன் பிரீமியர் லீக் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது. இந்த வாரம் தொடங்கப்பட்ட பிளே ஆப் சுற்றில் இதுவரை இரு போட்டிகள் முடிந்துள்ளன. முதலாவது தகுதி சுற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் தமது சொந்த மண்ணில் மும்பை அணியிடம் வீழ்ந்தது. எலிமினேட்டர் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை விசாகப்பட்டினத்தில் தோற்கடித்தது, டெல்லி அணி. இதன்பின்னர், இன்று நடைபெற உள்ள இரண்டாவது தகுதிச்சுற்றில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறப்போகும் இறுதிச்சுற்றில் மும்பை அணியுடன் பங்கேற்க உள்ளது.
மும்பை அணி இதுவரை சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர்களை கூட தமது மிடில் ஆர்டர் பேட்டிங்கில் இணைத்து சிறப்பாக வலம் வருகிறது. மும்பை அணியின் பவுலிங்கிலும் கூட எந்த ஒரு தொய்வும் இல்லை அணியை ரோகித் சர்மா திறம்பட வழிநடத்தி வருகிறார். எனவே, அடுத்த ஐபிஎல் சீசனில் மும்பை அணி விடுவிக்க போகும் மூன்று வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
#3.யுவராஜ் சிங்:
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், மும்பை அணிக்காக ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் ஆனார், யுவராஜ் சிங். பல லட்சம் ரசிகர்கள் ஏன் இவரை அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் இணைக்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர். தொடரின் ஆரம்பத்தில் நான்கு போட்டிகளில் களமிறக்கப்பட்ட யுவராஜ் சிங், பின்னர் வந்த ஆட்டங்களில் கழற்றி விடப்பட்டார். முதலாவது லீக் போட்டியில் அபாரமாக அரைசதம் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார், யுவராஜ் சிங். ஆனால், களம் இறங்கி சிறிது நேரத்துக்குப் பின்னர்தான் மாற்றத்தை வெளிக்கொணர்கிறார். இவரது பீல்டிங்கும் சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை 4 போட்டிகள் களமிறங்கிய இவர், 98 ரன்களை 25 என்ற பேட்டிங் சராசரியுடன் குவித்துள்ளார். எனவே, மும்பை அணி நிர்வாகம் இவரை அடுத்து வரும் ஐபிஎல் சீசனில் விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2.பென் கட்டிங்:
மும்பை இந்தியன்ஸ் அணியில் கிட்டத்தட்ட ஐந்து ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். அவற்றில் ஒருவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பென் கட்டிங். இவர் நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. கடந்த சீசனில் ஓரளவுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டிருந்தாலும் நடப்பு தொடரில் இவருக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. இவரது மிகப்பெரிய குறை என்றால் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக செயல்படாதது தான். மூன்று போட்டிகளில் களமிறங்கிய இவர், 18 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். மேலும் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி உள்ளார். மும்பை அணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆல்ரவுண்டர்களான பாண்டியா சகோதரர்கள், பொல்லார்ட் ஆகியோர் ஆடும் லெவனில் தொடர்ந்து நீடித்து இருப்பதால், இவருக்கு வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. எனவே, இவரும் அடுத்து வரும் ஐபிஎல் ஏலத்தில் விடுவிப்பதற்கான பெரும்பாலான வாய்ப்புகள் உள்ளன.
#1.பரிந்தர் சரண்:
நடப்பு ஐபிஎல் தொடரின் சிறந்த பந்துவீச்சை உள்ளடக்கிய அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது, மும்பை அணி. சிறந்த இறுதிகட்ட ஓவர்களை வீச பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளதால், இந்த அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அணியில் உள்ள பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால், பரிந்தர் சரண் ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் மும்பை அணியில் தமது திறனை நிரூபிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. நடப்பு தொடரில் இரு போட்டிகளில் களமிறங்கிய இவர், ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை. மேலும், இவரது பௌலிங் எக்கனாமி 13க்கும் மேல் உள்ளது. இவர் ஒரு சிறந்த டி20 பந்துவீச்சாளர் இல்லை என்பதால் மும்பை அணி அடுத்து வரும் ஐபிஎல் ஏலத்தில் இவரை விடுவிக்கலாம்.