இந்தியன் பிரீமியர் லீக் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் ஆகும். மிகப் பெரிய திறமையை வெளிக் கொணர்ந்து வரும் களமாக இருப்பதால் இந்த தொடர் மிகவும் புகழ்பெற்றது. இந்த தொடரில் விளையாடிய 8 அணிகளிலும் உள்ள தரமான வீரர்கள் ஆடும் லெவனில் இடம் பெறுவர். மீதமுள்ள வீரர்கள் வெளியில் உட்கார வைக்கப்படுவர். எனவே, நடப்பு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் திறமையான பல வீரர்கள் அணியில் இடம்பெற்று சில வீரர்கள் ஓரங்கட்டப்பட்டனர். அதுபோல திறமை இருந்தும் குறைந்த வாய்ப்புகளே அளிக்கப்பட்ட மூன்று சிறந்த வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.முரளி விஜய்:
கடந்த சில ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய், சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடர்களில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தவித்து வருகிறார். கடந்த ஆண்டு சென்னை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர், நடப்பு ஆண்டில் தக்கவைக்கப்பட்டார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன் மற்றும் டுபிளசிஸ் ஆகியோர் களமிறக்கப்பட்டனர். இதனால், ஆடும் லெவனில் முரளி விஜய்க்கு இடமளிக்கப்படவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் வெறும் இரு போட்டியில் மட்டுமே களமிறக்கப்பட்டார். அவற்றில் 64 ரன்களை குவித்து இருந்தார். 35 வயதான இவருக்கு போதிய ஆட்டங்களில் ஆடும் லெவனில் இடம் அளிக்காததால் தமது திறமையை வெளிக்கொணர முடியவில்லை.
#2.மார்டின் கப்தில்:
மிக வெற்றிகரமான தொடக்க ஆட்டக்காரர் களைக் கொண்ட அணிகளில் ஒன்று, சன்ரைசர்ஸ் ஹைதராபா.த் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் தங்களது நாடுகளுக்கு திரும்பும்வரை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கப்பட்டனர். இதனால், அணியில் இடம்பெற்ற மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மார்ட்டின் கப்டில் ஆடும் லெவனில் இருந்து கழற்றி விடப்பட்டார். மேற்குறிப்பிட்ட இரு வீரர்களின் விலகலுக்கு பின்னர், இவர் தொடரில் களமிறங்கினார். வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவற்றில் 81 ரன்களை 150 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் குவித்தார். இருப்பினும், இவரது முழு திறமையை வெளிக்கொணர இன்னும் பல போட்டிகளில் களமிறக்கி இருக்க வேண்டும்.
#1.யுவராஜ் சிங்:
டி20 வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர், யுவராஜ் சிங். நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இவர் 2019 ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் முதல் போட்டியில் களம் இறக்கப்பட்டார். டெல்லி அணிக்கு எதிரான அந்த போட்டியில் அரைசதம் அடித்து ரசிகர்களுக்கு விருந்து அளித்தார். அதன் பின்னர், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார். அதன்பின்னர், ஆடும் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். 37 வயதான இவர், நான்கு போட்டிகளில் களமிறக்கப்பட்ட 98 ரன்களைக் குவித்திருந்தார். களத்தில் ரன்களை குவிக்க ஓடுவதில் சற்று தடுமாறியதும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்படாமலும் இருந்தார். அதன்பின்னர் எந்த போட்டியிலும் இவரை மும்பை அணி நிர்வாகம் எடுக்கப்படவில்லை.