நடப்பு ஐபிஎல் தொடரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சிறப்பாக தொடங்கிய போதிலும் லீக் ஆட்டங்களின் இறுதி கட்டத்தில் சற்று தடுமாறி வந்தது. தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியல் நான்காம் இடத்தை பெற்றது, இந்த அணி. இதனால், ப்ளே ஆப் சுற்றுக்கு நான்காவதாக தகுதி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் 12 வெற்றி புள்ளிகள் கொண்ட ஒரு அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும். ஏனெனில், இந்த அணியின் ரன் ரேட் மற்ற அணிகளை விட சற்று கூடுதலாகும்.
எனினும், தொடரின் பிற்பாதியில் பலமற்றதாக விளங்கியதால் கடும் நெருக்கடிக்கு உள்ளானது, இந்த அணி. ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளில் பலமான அணியாக இந்த அணி உள்ளது. 2016 ஆம் ஆண்டில் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற இந்த அணி தற்போது நிலைகுலைந்து உள்ளது. எனவே, இத்தகைய தடுமாற்றங்களுக்கான மூன்று காரணங்களை பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
#1.சொதப்பலான மிடில் ஆர்டர்:
சன் ரைசர்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான தீபக் ஹூடா, யூசுப் பதான், ஷகிப் அல் ஹசன் போன்றோர் தொடர்ச்சியாக ஏமாற்றம் அளித்தனர். 11 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட மணிஷ் பாண்டே ஒருவர் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் மூன்று அரை சதங்கள் உள்பட 314 ரன்கள் குவித்து தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், மணிஷ் பாண்டே.
#2. ஜானி பேர்ஸ்டோ மற்றும் வார்னரின் இழப்பு:
உலகக் கோப்பை தொடர் முன்னேற்பாடுகளால் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பினர். ஹைதராபாத் அணியின் முக்கிய தூண்களாக விளங்கும் இவர்கள் அணியின் நிகர ரன் ரேட் கூடுவதற்கும் காரணமாக அமைந்தவர்கள். இவர்கள் இருவரும் அணியை விட்டு விலகியதால், கூடுதலாக ரன்களை குவிக்க இந்த அணி தடுமாறியது.
#3.செயல்படாத பவுலிங் கூட்டணி:
கடந்த ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் வரை செல்வதற்கு இந்த அணியின் பந்துவீச்சு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால், நடப்பு தொடரில் அணியின் பவுலிங் கூட்டணி எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. இதனால், சபாஷ் நதீம், சந்தீப் சர்மா, அபிஷேக் ஷர்மா போன்ற வெவ்வேறு பந்துவீச்சாளர்களை களமிறக்கியது, சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம். இருப்பினும், இத்தகைய முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தது. அணியில் இடம்பெற்றுள்ள கலீல் அகமது ஒருவர் மட்டுமே நம்பிக்கையளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்.