பன்னிரண்டாவது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகின்றது. இன்னும் ஓரிரு நாட்களில் பிளே ஆப் சுற்று நடைபெற உள்ளது. இந்த சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய மூன்று அணிகள் இதுவரை தகுதி பெற்றுள்ளனர். இன்னும் 2 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற உள்ளன. ஒவ்வொரு ஐபிஎல் தொடரை போலவே நடப்பு தொடரிலும் பல்வேறு சாதனைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடும் வகையில், மூன்று சிறந்த சாதனைகள் தற்போது முறியடிக்கும் தருணத்தில் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#3.ஐபிஎல்லில் அதிகபட்ச விக்கெட் கீப்பிங் டிஸ்மிஸ்ஸல்கள்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்றியமையாத வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவர் 2008 ஆம் ஆண்டு முதல் இந்த அணியில் கேப்டனாக அங்கம் வகித்து வருகிறார். 12 வருடங்களாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் இவர் எண்ணற்ற சாதனைகளை புரிந்துள்ளார். இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரு அணிகளுக்காக 186 போட்டிகளில் விளையாடி உள்ளார். அவற்றில் 128 டிஸ்மிஸ்ஸல்களை செய்துள்ளார். அதில் 90 கேட்சுகளும் 38 ஸ்டம்பிங்களும் அடங்கும். இந்தப் பட்டியலில் 130 டிஸ்மிஸ்ஸல்களை செய்து கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முன்னிலை வகிக்கிறார்.
அவற்றில், 100 கேட்சுகளும் 30 ஸ்டம்பிங்களும் அடங்கும். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி மின்னல் வேகத்தில் 2 ஸ்டம்பிங்க்களை புரிந்து சாதனை படைத்தார். இவரது மின்னல் வேகமான ஸ்டம்பிங்களால் நடப்பு தொடரில் தினேஷ் கார்த்திக்கை தோனி முந்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2.ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்சர்கள்:
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பங்கு போற்றத்தக்கது. அதேபோல், நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆந்திரே ரசல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தற்போது வரை நடப்பு தொடரில் 52 சிக்சர்களை அடித்துள்ளார். மேலும், 2019 ஐபிஎல் தொடரில் அதிகபட்ச சிக்சர்களை அடித்த வீரராகவும் இவர் விளங்குகிறார். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணியின் கிறிஸ் கெய்ல் 59 சிக்ஸர்கள் அடித்ததே இதுநாள்வரை சாதனையாக உள்ளது. எனவே, இன்னும் ஏழு சிக்சர்களை ரசல் அடித்தால், இந்த சாதனையை முறியடிப்பார்.
#1.நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் கேப்டன்:
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகள் தலா மூன்று முறை சாம்பியன் பட்டங்களை வென்று உள்ளது. இவற்றில் சென்னை அணியின் சார்பாக கேப்டன் தோனியும் மும்பை அணியின் சார்பாக ரோகித் சர்மாவும் இவ்விரு அணிகளை வழிநடத்தினார்கள். நடப்பு தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 9 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை வகிக்கிறது. மறுமுனையில், மும்பை இந்தியன்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் அடுத்த சுற்றான ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் ஆகும். எனவே, இம்முறை எந்த கேப்டன் தனது அணிக்கு நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.