2019 ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவு பெற்று பிளே ஆப் சுற்றில் இன்று துவங்க இருக்கின்றது. எனவே, ஒவ்வொரு சீசன்களை போலவே நடப்பு தொடரிலும் சில வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். அதன்படி, சில இந்திய வீரர்களான ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா, யுஸ்வேந்திர சாஹல் போன்றோரும் தங்களது பணியினை சிறப்பாக செய்துள்ளனர். அவற்றில், சில இளம் கிரிக்கெட் வீரர்கள் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இதில் குறிப்பிடும்படி, நடப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்ட மூன்று இந்திய இளம் வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.ரியான் பாரக் - ராஜஸ்தான் ராயல்ஸ்:
17 வயதான ரியான் பாரக், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் விளையாடியுள்ள 7 போட்டிகளில் 160 ரன்கள் குவித்துள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 30 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்துக் கொண்டிருந்தது. இந்த வேளையில், இளம் வீரர் ரியான் பாரக் ஆட்டத்தின் நெருக்கடியான சூழ்நிலையை உணர்ந்து அரை சதம் கடந்தார். அவ்வப்போது சில போட்டிகளில் பந்துவீசவும் செய்தார். இதில் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பன்முகத்திறன் கொண்ட இந்த இளம் வீரர் விரைவிலேயே இந்திய அணிக்கு புதுவரவாய் அமைவார் என்பதில் மாற்று கருத்து இல்லை.
#2.சுப்மான் கில் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
கடந்த ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றவர் சுப்மான் கில். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் சீசனில் களமிறங்கி அபாரமாக விளையாடினார். 14 போட்டிகளில் விளையாடி 296 ரன்கள் குவித்துள்ளார். இவர் பெரும்பாலான போட்டிகளில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே களமிறங்கினார். ஆனால், கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட பின்னர், மூன்று அரை சதங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#1.நவ்தீப் சைனி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :
தனது துல்லியமான பந்துவீச்சு தாக்குதலால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பெற்ற நவ்தீப் சைனி. இவர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இவர் விளையாடியுள்ள 13 போட்டிகளில் 11 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார். மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நம்பிக்கையளித்த ஒரே வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்களை திறம்பட வீசி எதிரணியின் ரன் வேகத்தை குறைத்துள்ளார். எனவே, இனி வரும் காலங்களில் இந்திய சீனியர் அணியில் இடம் பெறுவார் என தாராளமாக நம்பலாம்.