2019 ஐபிஎல் தொடர் கடந்த மாதம் தொடங்கி நேற்றைய ஆட்டம் வரை சிறப்பாக நடந்து வந்துள்ளது. புள்ளி பட்டியலில் 7 வெற்றிகளோடு டெல்லி அணி முதலிடம் வகிக்கிறது. இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு பிரமிக்கத்தக்க பேட்டிங் சாகசங்கள் அரங்கேறியுள்ளன. அதுவும், கொல்கத்தா அணியில் இடம் பெற்றுள்ள ரசல் இந்த 2019 ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த வீரராக தன்னை நிரூபித்து வருகிறார். காரணம், ஒவ்வொரு ஆட்டத்திலும் தனது அபார பேட்டிங் திறனை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும், இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடிய போதிலும் தங்களது அணி தோல்வியை தழுவிய 5 நிகழ்வுகளைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#5.நிதீஷ் ராணா: 85* Vs பெங்களூரு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் 4 விக்கெட்களை இழந்து தவித்துக் கொண்டிருந்த வேளையில், அதிரடி வீரர் ரசலுடன் கைகோர்த்தார், அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் நிதீஷ் ராணா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 214 ரன்கள் என்ற இலக்கை அடைய வேண்டும் என்ற நிலையில் அட்டகாசமாக விளையாடி 46 பந்துகளில் 85 ரன்களை குவித்தார். இதில் ஒன்பது பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் இவர் அடித்தார் . இருப்பினும், ஆட்ட முடிவில் இந்த அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.
#4.ஆந்திரே ரசல்: 65 Vs பெங்களூரு
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றி வருகிறார், ஆல்ரவுண்டர் ரசல். மேற்குறிப்பிட்ட கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராபின் உத்தப்பா வின் மந்தமான ஆட்டத்தால் கடும் நெருக்கடிக்கு உள்ளானது கொல்கத்தா அணி. இருப்பினும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் நிதிஸ் ராணாவுடன் இணைந்து அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். 9 சிக்சர்களுடன் இவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 260 என்ற வகையில் அமைந்தது. ஆட்டத்தின் கடைசி 8 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஏறக்குறைய வெற்றியின் விளிம்புக்கே இவரது ஆட்டம் அழைத்துச் சென்றது. இருப்பினும், போட்டியின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதோல்வியுற்றது.
#3.எம்.எஸ்.தோனி: 84* Vs பெங்களூரு
மகேந்திர சிங் தோனி இன்றளவிலும் உலகின் சிறந்த விக்கெட் கீப்பராக திகழ்ந்து வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு பின்னால் இவரின் கடும் உழைப்புகள் அனைத்தும் அடங்கி உள்ளது. ஆட்டத்தில் முண்ணனி பேட்ஸ்மேன்கள் விரைவாக விக்கெட்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் களம் புகுந்து இறுதி நேரம் வரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றி தேடித் தரும் வல்லமை இவரிடம் உள்ளது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் 5 பந்துகளில் 24 ரன்களை குவித்தார். கடைசி பந்தில் இரு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இவரால் ரன் குவிக்க முடியவில்லை. ஐபிஎல் போட்டிகளில் ரன்களை சேஸ் செய்யும் போது தோனி ஆட்டமிழக்காமல் இருப்பது இது நான்காவது முறையாகும்.
#2.கே.எல்.ராகுல்: 100 Vs மும்பை
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்தார், விக்கெட் கீப்பர் ராகுல். மந்தமாக ஆட்டத்தை தொடங்கிய போதிலும் அதிரடியாக ரன்களை குவித்து இந்த மூன்று இலக்க ஸ்கோரை எட்டினார். மும்பை அணி வீரர் ஹர்திக் பாண்டியா வீசிய 19 வது ஓவரில் 25 ரன்கள் குவித்தார், கே.எல்.ராகுல். இருப்பினும், இவரது ஆட்டமும் தோல்வியிலேயே முடிந்தது.
#1.சஞ்சு சாம்சன்: 102 Vs ஹைதராபாத்
இந்த நடப்பு ஐபிஎல் தொடரின் சதத்தை பதிவு செய்த முதல் வீரர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன், இந்த தொடரில் வெற்றிகளை குவிக்க தடுமாறி வருகிறதும் ராஜஸ்தான் ராயல்ஸ், இதனால் புள்ளி பட்டியலில் ஏழாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தனது மூன்றாவது ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்தார், இந்த இளம் விக்கெட் கீப்பர். இவரது ஆட்டத்தை கண்டு முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இணைக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்சில் சரவெடி தாக்குதலைத் தொடுத்த ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இணை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது.