ஒவ்வொரு ஐபிஎல் சீசனை போலவே, நடப்பு ஐபிஎல் தொடரிலும் பல சாதனைகள் அரங்கேறி உள்ளன. இதனை குறிப்பிடும் வகையில், கடைசி ஓவரில் வெற்றி பெற்ற போட்டிகள், ஹாட்ரிக் விக்கெட், சூப்பர் ஓவர், தரமான சுழற்பந்து வீச்சு, அனல் பறக்கும் யார்க்கர் பந்துவீச்சு, நம்ப முடியாத கேட்சுகள், அரக்கத்தனமான சிக்ஸர்கள் என பல தருணங்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் அரங்கேறி உள்ளது. இது மட்டுமல்ல, உலகின் சிறந்த வீரர்கள் அனைவரும் ஒரு கூரையின் கீழ் இணைந்து தங்களது அணிக்காக உழைத்து சாம்பியன் பட்டத்தை வெல்லும் பாலமாக உள்ளது இந்தியன் பிரீமியர் லீக். எதிர்பார்த்ததைப் போல விராத் கோலி, டேவிட் வார்னர், தோனி, கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல், பிராவோ, ஷிகர் தவான் போன்றோர் தங்களது அபார திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல், வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டரான ஆந்திரே ரசல், தனது அபார பார்மில் எதிரணியின் பந்துவீச்சாளர்களை கலங்கடித்து வருகிறார். கொல்கத்தா ஆல்ரவுண்டரான இவர் எந்த ஒரு பந்துவீச்சாளரையும் விட்டுவைக்காமல், தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார். இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 50 சிக்சர்களை அடித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர் அடித்த வீரரும் இவரே. இவருக்கு அடுத்தபடியாக மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 32 சிக்சர்களை அடித்து உள்ளார். இன்னும், இரு லீக் போட்டிகள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு உள்ள நிலையில் கெய்ல் அதிக சிக்சர்களை அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், பிளே ஆப் வாய்ப்புக்கு தகுதிபெறும் அணிகளில் ஒன்றாக விளங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ரசல்லே தொடரின் இறுதியில் அதிக சிக்சர்களை அடிக்கும் வீரராக கணிக்கப்படுகிறார். இதில் மேலும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், 31 வயதான இவர் அனைத்து ஐபிஎல் தொடர்களையும் சேர்த்து ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் கிறிஸ் கெயில் 59 சிக்ஸர்களை விளாசி இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். எனவே, இவருக்கு இன்னும் இந்த சாதனையை தகர்க்க 10 சிக்சர்கள் தேவைப்படுகிறது. ஆகையால், இரு ஐபிஎல் லீக் ஆட்டங்கள் மற்றும் பிளே ஆப் வாய்ப்புக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தகுதிபெற்று குறைந்தது மூன்று போட்டிகளில் இவர் விளையாடினால் இத்தகைய சாதனையை படைப்பார். இது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. தற்போது, கொல்கத்தா அணி நடப்பு தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளும் 7 தோல்விகளையும் சந்தித்து உள்ளது இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது.
நடப்பு 2019 ஐபிஎல் தொடரில் 11 இன்னிங்சில் களமிறங்கிய ஆந்திரே ரசல், 486 ரன்களைக் குவித்து தொடரின் அதிக ரன்களை குவித்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். மேலும், இவரது பேட்டிங் சராசரி 69.42 என்ற வகையில் அற்புதமாக உள்ளது.