ஐபிஎல் 2019 : சென்னை Vs மும்பை இந்தியன்ஸ் - மும்பை அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப இரண்டு வழிகள்

Mumbai Indians
Mumbai Indians

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டிகளுக்கு ரசிகர்களுக்கிடையே எப்பொழுதும் தனி வரவேற்பு உள்ளது. ஐபிஎல் தொடங்கியதிலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அணிகள் என மும்பை மற்றும் சென்னை அணிகளை கூறலாம். ஏனெனில், இரு அணிகளும் தலா மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்று உள்ளன. இந்த சீசனில் இரண்டாவது முறையாக சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. மும்பை கடைசியாக விளையாடிய போட்டியில் ராஜஸ்தானிடம், தோல்வியடைந்தது. சென்னை அணி கடைசியாக விளையாடிய போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

மும்பை அணி இந்த சீசனில், தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்ததில்லை. எனினும், சென்னை அணி, மும்பை அணிக்கு கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் கொண்ட சேப்பாக்கம் மைதானத்தில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் மும்பை அணி களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப அந்த அணியில் நிகழ வேண்டிய இரண்டு மாற்றங்கள் குறித்து காண்போம்.

#1. பென் கட்டிங்கிற்கு பதிலாக இஷான் கிஷான்:

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பென் கட்டிங்கிற்கு பதிலாக இஷான் கிஷானை மும்பை அணி களமிறக்க வேண்டும். ஏனெனில், பென்கட்டிங்-ஐ விட இஷான் கிஷான் சுழற்பந்து வீச்சை சிறப்பாக ஆடக்கூடியவர். மும்பை அணி கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் பென்கட்டிங், பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆதலால், அவருக்கு பதிலாக இஷான் கிஷானை களமிறக்குவது மும்பை அணிக்கு நல்ல தீர்வை தரும். மேலும், டிகாக் விரைவில் உலகக் கோப்பைக்காக தனது நாட்டிற்கு செல்லவிருப்பதால், இஷான் கிஷானை களம் காண செய்வது இஷானிற்கு ஒரு பயிற்சியாக அமையும். கடந்த சீசனில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் , மீதமுள்ள போட்டிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டர் பேட்டிங்கில் தடுமாறும் மும்பை அணிக்கு இந்த மாற்றம் நல்ல முடிவை தரும்.

#2. மயான்க் மார்க்கண்டேவிற்கு பதிலாக ஜெயந்த் யாதவ்:

ஏற்கனவே கூறியது போல, சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் காண்பது நல்லது. மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் சிறப்பாக பந்து வீசி வருகின்றார். மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் மயான்க் மார்க்கண்டே கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், தற்போதைய சீசனில் சிறப்பாக செயல்படவில்லை. ஆகவே, அவருக்கு பதிலாக ஜெயந்த் யாதவை, மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறக்க வேண்டும். இத்தகைய மாற்றங்கள் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கு வழிவகுக்கும். இந்த சீசனில் ஏற்கனவே மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதிய போட்டியில், மும்பை அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீசனில் ஏற்கனவே அடைந்த தோல்விக்கு பதில் கூறும் வகையில் சென்னை அணியும், மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற மும்பை அணியும் போராடும் என்பதால் இந்தப் போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Quick Links

App download animated image Get the free App now